புதிய மின் இணைப்பு வழங்கும் பணி நிறுத்திவைப்பு

திருச்சி, நவ. 9: தமிழகம் முழுவதும் வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு வழங்கும் பணி தாற்காலிகாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏறத்தாழ 40,000 பேர் விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்
Updated on
2 min read

திருச்சி, நவ. 9: தமிழகம் முழுவதும் வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு வழங்கும் பணி தாற்காலிகாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏறத்தாழ 40,000 பேர் விண்ணப்பித்துவிட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

  வீடுகளுக்கான ஒருமுனை (சிங்கிள் பேஸ்) மின்சார இணைப்புப் பெற விரும்புவோர் ரூ. 1,600 முன்வைப்புத் தொகையாக செலுத்தினால், ஒரு நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் புதிய இணைப்பு வழங்கப்படும் என்பது மின் வாரியத்தின் அறிவிப்பு.

  ஆனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக புதிய மின் இணைப்பு வழங்கும் பணியை மின் வாரிய நிர்வாகம் தாமதப்படுத்தி வருவதாக புதிதாக மின் இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருப்போர் தெரிவிக்கின்றனர்.

  மும்முனை மின்சார இணைப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஓரிரு நாள்களுக்குள் இணைப்பு வழங்கும் மின் வாரியம், தங்களைப் புறக்கணிப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

  திருச்சி மாவட்டத்தில் 3,500 பேர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,250 பேர், ஈரோடு மாவட்டத்தில் 1,400 பேர், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 1000 பேர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தலா 400 பேர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 600 பேர் என்று மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 40,000 விண்ணப்பங்கள் வரை தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்கள் மின் வாரிய அலுவலகத்துக்கு வந்து அலுவலர்களைச் சந்திப்பதும், பின்னர் அலுவலர்களின் சாக்குபோக்குகளைக் கேட்டு ஏமாற்றத்துடன் திரும்புவதும் இப்போது வாடிக்கையான நிகழ்வாகி இருக்கிறது.

  இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கச் சென்றால், மின் கணக்கீட்டுக் கருவி (மீட்டர்) இருப்பு இல்லை என்றும், தலைமை அலுவலகத்திலிருந்து கருவி அனுப்பப்பட்டால் மட்டுமே புதிதாக மின் இணைப்புகள் கொடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

  கணக்கீட்டுக் கருவி கொள்முதலுக்காக ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனத்துடன் தற்போது ஏற்பட்ட சிக்கலால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின் வாரிய அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பற்றாக்குறையை மறைக்க நாடகமா?:   ஆனால், மின் பற்றாக்குறை பிரச்னையை சமாளிப்பதற்காகவே மறைக்கவே கணக்கீட்டுக் கருவி தட்டுப்பாடு என்ற புதிய கதையை மின் வாரியம் கூறுகிறது என்கின்றனர் விவரம் அறிந்தோர்.

  ஏற்கெனவே மின் தடையால் மாநிலம் முழுவதும் அதிருப்தி நிலவி வரும் நிலையில், புதிதாக 40,000 இணைப்புகள் வழங்கினால் மேலும் மின் பற்றாக்குறை ஏற்படும்; ஆட்சிக்கு அது மேலும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்பதாலேயே மின் வாரியம் இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

  மேலும், மும்முனை மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்போருக்கு மட்டும் எங்கிருந்து கணக்கீட்டுக் கருவிகள் வருகின்றன என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  கடந்த சில வாரங்களாகவே மின் வாரிய அலுவலகங்களில் இப்படியான கேள்விகளோடும், குற்றச்சாட்டுகளோடும் நிற்கும் புதிய இணைப்பு விண்ணப்பதாரர்களைப் பரவலாகப் பார்க்க முடிகிறது. ஆனால், அரசுத் தரப்பில் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை; பதிலும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com