சீரான மழைப் பொழிவை இழந்து வரும் வேதாரண்யம்

வேதாரண்யம், அக். 21:   அதிக அளவில் மழை பெய்யும் இயற்கையான அமைப்பைப் பெற்றுள்ள வேதாரண்யம் பகுதி; அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் கேடுகள், இயற்கை வள அழிவு உள்ளிட்ட காரணங்களால் சீரான மழைப் பொழிவை இழந்து வ
Updated on
2 min read

வேதாரண்யம், அக். 21:   அதிக அளவில் மழை பெய்யும் இயற்கையான அமைப்பைப் பெற்றுள்ள வேதாரண்யம் பகுதி; அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் கேடுகள், இயற்கை வள அழிவு உள்ளிட்ட காரணங்களால் சீரான மழைப் பொழிவை இழந்து வருகிறது.

  பூமி வெப்பம் அடைந்து வருவதால் உலக நாடுகள் கவலையடைந்து, அதை எதிர்கொள்ள வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றன.

  ஓசோன் மண்டலத்தில் விழுந்துள்ள ஓட்டை தொடங்கி, இதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் கூறப்படுகின்றன. இவை ஒருபுறம் இருந்தாலும், நாம் வசிக்கும் பகுதியிலேயே இயற்கைக்கு எதிராக நிகழ்ந்து வரும் சம்பவங்களை உணர்ந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.

தமிழகத்தின் சிரபுஞ்சி:

  நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதி வடகிழக்குப் பருவத்தில் அதிக அளவு மழைப் பொழிவு ஏற்படுவதற்கான சூழலை இயற்கையாகவே பெற்றுள்ளது. அதிலும், அருகேயுள்ள திருப்பூண்டி அதிகளவான மழைப் பொழிவுக்கு பெயர் பெற்றது. இவ்வூர் தமிழகத்தின் சிரபுஞ்சி எனக் குறிப்பிடப்படுகிறது.

  மேலும், வேதாரண்யத்தின் கிழக்கு மற்றும் தெற்கு திசைகள் வங்காள விரிகுடா கடல் பகுதியாக உள்ளது. மாறுப்பட்ட கடல் அமைப்பைக் கொண்டுள்ளதால், வங்கக் கடலில் வடகிழக்கு பருவ காலங்களில் ஏற்படும் காற்றழுத்த மாறுபாடு, புயல் போன்றவற்றால் மழை கூடுதலாகும் வாய்ப்பை அளித்துள்ளது.

  அத்துடன் மாவட்டத்தின் கிழக்கு கடலோரமான கோடியக்கரை தொடங்கி பொய்கைநல்லூர் வரை கடலோரக் கிராமங்களில் ஆங்காங்கே காணப்படும் மணல் மேடுகளும், அவற்றை சார்ந்துள்ள வளமான பரப்பில் மரங்களும், கோடியக்கரையில் வெப்ப மண்டல எல்லைக்கோட்டில் அமைந்துள்ள பசுமை மாறா காடுகளும் ஏற்ற நிலையைத் தந்துள்ளன.

முத்துப்பேட்டை லகூன்:

  கடலோரமான கோடியக்கரை தொடங்கி முத்துப்பேட்டை வரையுள்ள மன்னாவரம், பச்சைக்காடு உள்ளிட்ட தீவுக் காடுகளும் மாநிலத்தின் மிகப் பெரிய சதுப்பு நிலக் காடாகக் கருதப்படும் அலையாத்திக் காடுகளும் உள்ளன. அந்தப் பகுதியில் உள்ள லகூன் (11 கி.மீ.) உலக புவியியல் அமைப்பில் முக்கிய ஈரப்பத நிலப் பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு உருவாகும் குளிர்ந்த காற்றானது வெளிநாடுகளிலும் மழைப் பொழிவுக்கான சூழலைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயற்கைக்கு எதிராக:

  இந்தப் பகுதியில் பல்வேறு காரணங்களால் ஆண்டு சராசரி மழையளவு குறைந்து வருகிறது. பெரிய அளவிலான நீர் நிலைகளைப் பெற்றிருந்தும் போதிய பராமரிப்புக் குறைவால் சேமிக்க முடியாத தண்ணீர் வீணாகக் கடலுக்குள் சென்று விடுகிறது. இதனால், நில நீர் வளம் குறைந்ததுடன், மழைக்கான தாவர உற்பத்தியும் குறைந்து வருகிறது.

  செங்கல் தயாரிப்புக்காக மரங்கள் அழிக்கப்பட்டு விறகாகவும், இழை தயாரிப்பு, காகித ஆலைகளின் பயன்பாட்டுக்காவும் அதிக விலை கிடைப்பதால் வேம்பு, புங்கை உள்ளிட்ட மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், காடு வளம் குறைகிறது.

ஊசியிலை தாவரம்:

  வடிகால் வசதிகள் குறைவு உள்ளிட்ட காரணங்களால் நெல் விளைவிக்கும் வயல்களில் அண்மை ஆண்டுகளாக சவுக்கு மரம், தைலமரம் சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது. இது தற்போது சுமார் 9 ஆயிரம் ஹெக்டேரை தாண்டியுள்ளது. சவுக்கு ஊசியிலை தாவர குடும்ப வகையைச் சேர்ந்தது. இது காற்றில் உள்ள ஈரப்பதத்தையே கிரகித்து வளரக் கூடியவை. அத்துடன், தைல மரமும் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சக் கூடியது.

அதிகரித்து வரும் உப்பு உற்பத்தி:

  உப்பு உற்பத்தி பரப்புகளிலும் வயல், வடிகால் நிலப் பகுதியில் அமைந்துள்ள இறால் பண்ணைகளிலும் அதன் உற்பத்திக்காக கடல் நீர் தேக்கப்படுகிறது. உப்புத்தன்மை கூடுதலாகி வெப்பத்தின் அளவும் அதிகரிப்பதால், மேகத்தை குளிரச் செய்யும் தன்மை காற்றுக்கு கிடைப்பதில்லை.

 இது போன்ற இயற்கைக்கு எதிரான பல காரணிகள் கடந்த சில ஆண்டுளாக சீரான மழைப் பொழிவை ஏற்படுவதில் பிரச்னையாக இருந்து வருகின்றன.

  இந்நிலையில், நிகழாண்டில் தொடர்ந்து வெப்பம் அதிகரித்து நிலை கொண்டுள்ளது. போதிய மழை இல்லாமல் நீடித்து வருகிறது.

  உலகம் முழுவதும் பல்வேறு காரணிகளால் மழை, வெப்பம் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கலாம். இந்தப் பகுதியைப் பொருத்தவரையில் அதிகரித்து வரும் சூழல் கேடுகளைத் தடுக்கவும், இயற்கை வளத்தைப் பாதுகாப்பதுடன், 100 நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை மாற்றியமைத்து மரம் வளர்ப்பில் (சவுக்கு, தென்னை தவிர்த்து) முனைப்புக் காட்ட வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com