கொள்ளையர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் காவல் துறையின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?

   திருச்சி, செப். 11: திருச்சி அருகேயுள்ள ராம்ஜிநகர், காந்திநகர் பகுதிகளில் உள்ள கொள்ளையர்கள் மனம் திருந்தி வாழ காவல் துறையினர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பலன் கிடைக்குமா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்த
Updated on
2 min read

 திருச்சி, செப். 11: திருச்சி அருகேயுள்ள ராம்ஜிநகர், காந்திநகர் பகுதிகளில் உள்ள கொள்ளையர்கள் மனம் திருந்தி வாழ காவல் துறையினர் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பலன் கிடைக்குமா ? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 ராம்ஜிநகர், காந்திநகர் பகுதிகளில் உள்ளவர்களில் சிலர், மற்றவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள். இவர்கள் மீது வெளி மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

 கொள்ளையடிப்பதை மட்டுமே தொழிலாகச் செய்து வரும் இவர்கள், வெளி மாநிலங்களில் தங்களது கைவரிசையைக் காட்டி பல லட்சங்களைக் கொள்ளையடித்துவிட்டு, பின்னர் சொந்த ஊரில் தஞ்சம் புகுந்து விடுவது வழக்கம்.

 தமிழகத்தில் இவர்கள் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால், இங்கு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் நிலை உள்ளது.

 இதனால், வெளி மாநிலங்களில் தமிழகத்தைப் பற்றி கெட்டபெயர் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராம்ஜிநகர், காந்திநகர் கொள்ளையர்களை கட்டுப்படுத்தத் தமிழக அரசு முடிவு செய்தது.

 கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில், ராம்ஜிநகர், காந்திநகர் பகுதியில் வசிப்பவர்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோரைத் திருத்தி நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டார்.

 இதற்கான பணியில் இறங்கிய மாவட்டக் காவல் துறை கொள்ளையர்கள் இதுவரை சேர்த்த சொத்து விவரம், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்தனர்.

 பின்னர், சம்பந்தப்பட்டவர்களை அணுகி மனம் திருந்த முன்வந்தால், அரசு மூலம் உதவிகள் செய்வோம் எனக் காவல் துறை அதிகாரிகள் விளக்கினர்.

 இதற்குப் பலனாக, தற்போது 11 பெண்கள் உள்பட 85 பேர் மனம் திருந்தி வாழ முன்வந்துள்ளனர். மற்றவர்களை விரைவில் திருந்தி வாழ முன்வரும்படி மாவட்ட நிர்வாகமும், காவல் துறை அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

 "தாங்களாக முன்வந்தால் அரசு வேண்டிய உதவிகளைச் செய்யும், இல்லையெனில், அதிகாரத்தைப் பயன்படுத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்' என அண்மையில் நடைபெற்ற அவர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா எச்சரித்தார்.

 ஆனால், கொள்ளைச் சம்பவங்களில் இனி ஒருபோதும் ஈடுபட மாட்டோம், நாங்கள் முழுவதுமாக மனம் திருந்திவிட்டோம் என முன்வந்து கூறுபவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள்.

 இவர்களால், இனி ஓடியாடி தொழில் செய்ய முடியாததால், போலீஸôரை திருப்திபடுத்தவே இப்படிக் கூறுகின்றனர் என்றும், அவர்களால் தொழிலை விடுவது சிரமம் எனவும் காவல் துறையினர் மத்தியிலேயே பேச்சு நிலவுகிறது.

 அப்படியே, திருந்துவதாகக் கூறினாலும், அவர்களை முழுவதுமாகக் கண்காணிக்காவிட்டால், போலீஸôருக்கு மேலும் தலைவலிதான் என்கிறார் கடந்த சில ஆண்டுகளாகக் கொள்ளையர்களைக் கண்காணித்து வரும் போலீஸ் அதிகாரி ஒருவர்.

 இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி கூறியது:

 "முதல்வர் உத்தரவிட்ட நாளிலிருந்து கடந்த 6 மாதங்களாக ராம்ஜிநகர், காந்திநகர் கொள்ளையர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து வருகிறோம்.

 இந்த இரு பகுதிகளிலும் சுமார் 200 பேர் வரை கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதைக் கண்டறிந்துள்ளோம். தற்போது, 85 பேர் திருந்தி வாழ முன்வந்துள்ளனர். பலர் வெளிமாநிலச் சிறைகளில் உள்ளனர்.

 கொள்ளையர்கள் அனைவரையும் விரைவில் மனம் திருந்த வைத்துவிடுவோம்' என்றார் அவர்.

 ஏற்கெனவே இரண்டு முறை மேற்கொண்ட முயற்சி உரிய பலன் அளிக்காத நிலையில், தற்போது காவல் துறை மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால், குற்றச் சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், எந்த அளவுக்குக் கை கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com