திருச்சி, ஆக. 10: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பராமரிப்பில்லாத குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஏறத்தாழ 50,000-க்கும் அதிகமானோர் வந்து செல்வதாக அண்மையில் கணக்கிடப்பட்டுள்ளது. பயணிகளுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் இந்த ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன.
ரயில் நிலையத்துக்கு வருவோர் மற்றும் ரயிலில் பயணிப்போர் அனைவரும் பயன்பெறும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாகவே இருந்து வந்தது.
இதையடுத்து, கடந்த 2008-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சுத்திகரிப்பு இயந்திரங்களுடன் கூடிய 5 குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
முதலாவது நடைமேடையில் உயர் வகுப்பு பயணிகள் ஓய்வு அறையில் அருகே ஒன்றும், பயணிகள் நுழையும் பகுதியில் உள்ள புத்தக நிலையம் அருகே ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 2 மற்றும் 3-வது நடைமேடைக்கு ஒன்றும், 4 மற்றும் 5-வது நடைமேடைக்கு ஒன்றும் என மொத்தம் 4 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இயந்திரமும் 1,000 லிட்டர் கொள்ளவு கொண்டவை. தலா | 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் மூலம் தினமும் 20,000 லிட்டர் வரை காவிரியாற்று தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்தது | 10 முதல் | 15 வரை கொடுத்தால்தான் ஒரு லிட்டர் சுத்தமான குடிநீர் கிடைக்கும் என்ற நிலையில், மக்களுக்கு இலவசமாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சென்னை, திருச்சி, புதுச்சேரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த வகையான சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன.
ஆனால், அண்மைக்காலமாக இந்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பராமரிப்பின்றி காணப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. மாதம் ஒருமுறை இந்தத் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என பாராமரித்து வரும் தனியார் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தற்போது, சரியான பாரமரிப்பு இல்லாததால், தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே விநியோகமாகும் நிலை உள்ளது. இதை அறியாத பயணிகள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என நினைத்து பாட்டில்களில் பிடித்துச் செல்லும் நிலை தற்போது உள்ளது. இந்த இயந்திரங்கள் அனைத்தும் கடைசியாக மார்ச் மாதம் 22-ம் தேதி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அந்தந்த இயந்திரங்களிலேயே உள்ளன.
இதனால், தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, இந்தக் குழாய்களில் குடிநீர் பிடிக்க பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்தக் குழாய்கள் இருந்தும் பயணிகளுக்குப் பலனில்லாத நிலையே தொடர்கிறது.
இதுபற்றி ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "தொடக்கத்தில் இந்த இயந்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட குடிநீருக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால், சரியான பராமரிப்பு இல்லாததால் குடிநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமலேயே விநியோகமாகிறது. இதை யாரும் கண்டு கொள்வதில்லை' என்றனர்.
இதுகுறித்து ரயில் பயணி ஒருவர் கூறியது:
"நாங்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நினைத்தே பிடித்துச் செல்கிறோம். ஆனால், குடிக்கும்போதுதான் அது சுத்திகரிக்கப்படாமல் இருப்பது தெரிகிறது. குடிநீரைச் சுத்திகரிக்காமல் வழங்குவதால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் உடனே தலையிட்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பழுது நீக்கிப் பயணிகளுக்குச் சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.