கந்தர்வகோட்டை, ஆக. 24: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகேயுள்ள வேலாடிப்பட்டியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டதிலிருந்து 8 ஆண்டுகளாக மரத்தடியிலேயே இயங்கி வருகிறது.
இந்த ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியின் தொடர்ச்சியாக கடந்த 2002-ம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது இந்த உயர்நிலைப் பள்ளியில் 578 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த 5 வருடங்களாக கந்தர்வகோட்டை வட்டாரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளிலேயே அதிக தேர்ச்சி விகிதம் (85 சதம்) பெறும் பள்ளியாக இந்தப் பள்ளி திகழ்கிறது.
ஆனால், பள்ளியின் செயல்பாடுதான் வளர்கிறதேயன்றி, பள்ளி வளர்ந்தபாடில்லை. தொடங்கப்பட்ட அன்று செயல்பட்ட மரத்தடியிலேயே இன்றைக்கும் பள்ளி செயல்படுகிறது.
இதனால், மாணவர்கள் பெரும் சங்கடங்களுக்கிடையே தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர். குறிப்பாக, கோடைக்காலங்களிலும் மழைக்காலங்களிலும் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர்.
இந்தப் பள்ளிக்குக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்தி இந்தப் பகுதி மக்கள் பல முறை அரசு அலுவலர்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் மனு அளித்தும் இதுவரை பயனில்லை என்கின்றனர்.
இதுகுறித்து பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர்கள் கழகத் தலைவர் ப. குமார் கூறியது:
""பள்ளி தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே பள்ளிக் கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரி வருகிறோம். சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரிடமும் மனு அளித்துள்ளோம். எவ்வித நடவடிக்கையும் இல்லை.
பள்ளிக்கு அருகே வனத் துறைக்குச் சொந்தமான 10 ஏக்கர் இடம் தரிசாக உள்ளது. இந்த இடத்தைப் பள்ளிக்கு கட்டடம் கட்ட அளிக்க வேண்டும் என்று கோரினோம். வனத் துறை இடத்தை பள்ளிக் கட்டடம் கட்ட கொடுக்கலாம் என 2007-ல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆனால், அரசுத் துறையினர் இந்த விஷயத்தில் அலட்சியப்படுத்துகின்றனர்.
பள்ளிக்குக் கட்டடம் கட்ட நபார்டு வங்கியின் மூலம் ரூ.34 லட்சம் இரு முறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இட பிரச்சனை காரணமாக ஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.