சிறுதலைக்காட்டில் வசதிகள் முழுமை பெறுமா?

வேதாரண்யம், டிச. 24: சிறுதலைக்காடு மீனவர் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக நிறைவேறி வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ள அக் கிராமத்தினர், அவசியமான தேவைகள் முழுமையாகக் கிடைக்கவும் எதிர்பார
Updated on
2 min read

வேதாரண்யம், டிச. 24: சிறுதலைக்காடு மீனவர் கிராமத்துக்குத் தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக நிறைவேறி வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ள அக் கிராமத்தினர், அவசியமான தேவைகள் முழுமையாகக் கிடைக்கவும் எதிர்பார்த்துள்ளனர்.

   நாகை மாவட்டம், வேதாரண்யத்திலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் கடலோரம் நீர் சூழ்ந்த தீவு போன்ற அமைப்பாக உள்ளது சிறுதலைக்காடு மீனவர் கிராமம்.

   சிறுதலைக்காட்டில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் குடியேறினர். தற்போது 300-க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 1300-க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

    இந்தக் கிராமத்தின் நிலைகுறித்து 26.12.2007 தேதி தினமணியில் சுனாமிக்குப் பின்னரும் பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராகாத சிறுதலைக்காடு தீவு என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

    அந்தச் செய்தியில், இங்குள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து முடிப்போர் படிப்பைத் தொடரமுடியாத நிலை, மீன்பிடித் தொழிலுக்கு உதவும் வகையில் கடல் பகுதியிலிருந்து கிராமம் வரையில் கால்வாய் வசதி கோரும் நீண்டகாலக் கோரிக்கை, பேருந்து வசதி, சுகாதாரம், மருத்துவம், குடிநீர், பேரிடர்கால கட்டமைப்புகள், குடியிருப்புகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகள் விரிவாக முன்வைக்கப் பட்டிருந்தன.

   இதையடுத்து, நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்த 31.12.2007 அன்று கிராமத்தினர் பங்குத் தொகையாக அளித்த ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்துடன் கருத்துரு அனுப்பப்பட்டு, 1.6.2010 முதல் தரம் உயர்த்தப்பட்டு, அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது.

    சுமார் 7 கி.மீ. தொலைவு நடந்தே சென்று பேருந்து வசதியைப் பெற்று வந்த இந்தக் கிராமத்திற்கு, 14.1.2009 முதல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    கிராமத்திலிருந்து கடல் பரப்புவரை 3 கி.மீ. தொலைவுக்கு மீன்பிடிப் படகுகள் சென்று வரும் வகையில், கால்வாய் அமைக்கும் பணியும் 2009-ம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பணியை நிறைவேற்ற அப்போது நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த மு. ஜெயராமன் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்.

   இதுகுறித்து கிராமத்தின் முன்னாள் தலைவர் ரா. சுப்பிரமணியன் கூறியது:

   பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய மதிப்பீட்டில் கூடுதல் நிதியாகத் தர வேண்டும். தொடக்கப் பள்ளி செயல்படும் வகுப்பறைக் கட்டடம் போதுமானதாக இல்லை. மேலும் ஒரு கட்டடம் கட்டித் தருவதுடன், பழுதடைந்துள்ள கட்டடத்தை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   கால்வாய் வசதி படகுகள் சென்று வர பயனுள்ளதாக உள்ளது. அதேநேரத்தில், முகப்பு பகுதியை ஆழப்படுத்தினால்தான் படகுகளை அதிக எண்ணிக்கையில் நிறுத்த வசதியாக இருக்கும்.

   தினமும் இரண்டு முறை வந்து செல்லும் பேருந்தை காலை 9 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 4 மணி என மூன்று தடவைகள் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

    இயற்கை பேரிடர் காலத்தின் போது மக்கள் அவதியுறுவது தொடர்வதைத் தடுக்க, இங்கு பழுதடைந்த நிலையில் உள்ள புயல் பாதுகாப்பு கட்டடத்தை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

    இந்தக் கிராமத்தில் நிலத்தடி நீர் எடுக்க வாய்ப்பில்லாததால், வெளியூரிலிருந்தும் கொள்ளிடம் கூட்டுத் திட்டம் மூலமும் குடிநீர் பெறப்படுகிறது. குறிப்பாக, பள்ளிக்கு முறையான கட்டமைப்பு மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டியுள்ளது.

    அத்துடன், சுகாதாரக் குறைபாடுகளால் கடந்த ஆண்டில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். சிலருக்கு லெப்டோபைரோஸிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் அறிகுறி இருந்தது.

இதைக் கவனத்தில் கொள்வதுடன், மக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், திறந்த வெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க ஏதுவாக, பொது கழிப்பறைகளை அமைப்பதும் அவசியமாகும் என்கின்றனர்  சமூக ஆர்வலர்கள்.

    சிறுதலைக்காட்டில் அடிப்படை வசதிகளுடன் அவை சார்ந்த மேம்பாட்டுப் பணிகள், பேரிடர் கால பாதுகாப்பு கட்டமைப்புகள், பாதுகாப்பான குடியிருப்புகள் அமைக்கவும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என இந்த கிராம மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com