திருச்சி, பிப். 22: காவல் துறையினருக்கு இணையான பணியில் ஈடுபட்டு வரும் ஊர்க்காவல் படையினருக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த 1962 ஆம் ஆண்டு சீன படையெடுப்புக்குப் பிறகு நம் நாட்டில் காவல் துறையினருக்கு இணையாக உள்நாட்டுப் பாதுகாப்பில் சமூக ஆர்வலர்களையும் ஈடுபடுத்த அரசு முடிவு செய்தது.
இதைத்தொடர்ந்து, 1963 ஆம் ஆண்டில் "ஊர்க்காவல் படை' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், ஆர்வம் உள்ளவர்கள் சேரலாம் எனவும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அரசுப் பணி மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட பலர் சமூகப் பணியாக ஊர்க்காவல் படையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழகத்தில் பெண்கள் உள்பட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது ஊர்க்காவல் படையில் உள்ளனர்.
திருச்சி மாநகரப் பகுதியில் 110 பெண்கள் உள்பட 330 பேரும், புறநகர்ப் பகுதியில் 55 பெண்கள் உள்பட 275 பேரும் தற்போது பணியில் உள்ளனர்.
மாநகரப் பகுதியில் காவல் ஆணையரும், புறநகர்ப் பகுதிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் ஊர்க்காவல் படையின் கட்டளை அதிகாரிகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.
காவல் துறைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு அளிக்கப்படும் பயிற்சிகளைப் போல, ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் அணிவகுப்பு பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி போன்றவை 35 நாள்கள் அளிக்கப்படும்.
கோயில் விழாக்களில் பாதுகாப்பு, முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போது பாதுகாப்பு, இயற்கைச் சீற்றங்களின்போது பொதுமக்களுக்கு உதவுவது, நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்தைச் சீர்செய்வது எனக் காவல் துறையினர் செய்யும் அனைத்துப் பணிகளிலும் அவர்களுடன் இணைந்து ஊர்க்காவல் படையினரும் சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.
என்றாலும், இவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மிகவும் குறைந்த அளவே. பணிக்கு வந்த நாள்களைக் கணக்கிட்டு நாள் ஒன்றுக்கு ரூ. 45 வீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவும் கடந்த 3 ஆண்டுகளாகத்தான்.
அடிப்படை வீரர்கள் முதல் கட்டளை அதிகாரிகள் வரை அனைவருக்குமே ஒரே மாதிரியாகத்தான் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தொடக்கத்தில் ஆர்வத்துடன் இப்படையில் இணைந்து வந்தவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறையத் தொடங்கியது. சமூக அக்கறையுடன் இந்தப் பணியில் பலர் ஈடுபட்டு வந்தாலும், ஊக்கத் தொகையும் தற்போது சரியாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
மேலும், 3 ஆண்டுகளாக தினசரி ஊக்கத்தொகையாக ரூ. 45 மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில், ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை.
"புதுச்சேரியில் தினமும் ரூ. 200 ஊதியம் என்ற அடைப்படையில் 8 மணி நேரப் பணியில் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆந்திரம், பிகார் போன்ற மாநிலங்களில் மாத ஊதியம் அடிப்படையில் தாற்காலிகப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோலத் தங்களையும் காவல் துறையில் ஓர் அங்கமாக்க வேண்டும்' என நீண்ட காலமாக ஊர்க்காவல் படையில் சேவை செய்து வருபவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாகவும், படையினருக்கு ரூ. 100 எனவும், அதிகாரிகள் பிரிவில் வருபவர்களுக்கு ரூ. 125, ரூ. 150 என பதவிக்கு ஏற்றவாறு ஊக்கத் தொகை வழங்க அரசு முடிவு செய்து இருப்பதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், பேச்சளவில் உள்ள பரிசீலனை உத்தரவாகப் பிறப்பிக்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ஊர்க்காவல் படையினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.