திருச்சி, ஜூன் 30: கும்பகோணம்- சென்னை இடையே திருச்சி வழியாக இயக்கப்பட்டு வரும் மலைக்கோட்டை விரைவு ரயிலை இன்னும் ஓராண்டுக்குள் திருச்சியில் இருந்து இயக்க வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.
திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த மலைக்கோட்டை விரைவு ரயில் மயிலாடுதுறை- விழுப்புரம் அகல ரயில் பாதைப் பணிகள் தொடங்கிய போது, அந்த வழியாகச் சென்ற ரயில்கள் நிறுத்தப்பட்டதால் கும்பகோணம் வரை நீட்டிக்கப்பட்டது.
விழுப்புரம்} மயிலாடுதுறை அகலப் பாதை பணிகள் முடிவடைந்து, அந்தப் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியதும், மீண்டும் திரு சியிலிருந்து இந்த ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், இந்தப் பாதையில் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கிய நிலையில், மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் ரயில்வே நிர்வாகம் தாமதித்து வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியிலிருந்து இயக்குவது என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவல் உண்மையல்ல என்று திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், புதிய கால அட்டவணை வெளியிடப்படும் போது திருச்சியில் இருந்து மலைக்கோட்டை விரைவு ரயிலை இயக்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என திருச்சி மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
சென்னையில் புதன்கிழமை தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷன் வெளியிட்ட ரயில்வே கால அட்டவணையில், மலைக்கோட்டை விரைவு ரயில் கும்பகோணத்தில் இருந்தே புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அட்டவணையை இன்னும் ஓராண்டு வரை மாற்ற வாய்ப்பு இல்லை என்பதால், திருச்சி மக்களின் கனவு நிறைவேறாது என்றே ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மலைக்கோட்டை என்ற பெயரைத் தாங்கி இயக்கப்பட்டு வரும் இந்த ரயில், திருச்சி மக்களைவிட தஞ்சாவூர், கும்பகோணம் பகுதி மக்களுக்கே அதிகப் பயன் அளித்து வருவதாக திருச்சி பகுதி பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த ரயிலை திருச்சியில் இருந்து இயக்கக் கூடாது என்பதில் தஞ்சாவூரைச் சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருப்பதாகவும், அதனால்தான் திருச்சியிலிருந்து ரயிலை இயக்குவதில் தாமதப்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனிடையே, மலைக்கோட்டை விரைவு ரயிலை திருச்சியில் இருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்வது என்றும் சில பொது நல அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.