கிடப்பில் போடப்பட்ட ஏரிகள் வெட்டும் திட்டம்?
காரைக்கால், ஜூன் 10: காரைக்காலில் விவசாயிகள், பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்னை தீர ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கூடுதல் ஏரிகள் வெட்டும் திட்டத்தை புதுவை அரசு செயல்படுத்த வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் நெல்களஞ்சியம் எனப் பெயர் பெற்ற காரைக்காலில் தற்போது விளைநிலங்களின் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், மேட்டூர் அணை உரிய காலத்தில் திறக்கப்படுவது இல்லை. காலம் தவறி திறக்கப்படும் தண்ணீர் காரைக்கால் வந்து, விவசாயம் மேற்கொள்ளப்பட்டாலும் வரும் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளத்தால் அறுவடை பாதிக்கப்படுகிறது.
விவசாயிகள் ஒருபோகமாவது நம்பிக்கையோடு விவசாயம் செய்ய தண்ணீர் அவசியமாகிறது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் செட்டிக்கோட்டகம், நல்லம்பல் ஆகிய பகுதிகளில் இரு ஏரிகள் வெட்டப்பட்டன. ஆண்டுதோறும் இங்கு தண்ணீர் தேக்கிவைக்கப்படுகிறது.
விவசாயிகளின் தேவைகளை ஓரளவுக்காவது நிறைவு செய்யும் இந்த ஏரித் தண்ணீர், ஏரிகள் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளின் நிலத்தடி நீர் வளம் பெறவும் உதவுகிறது. இதனால், அந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் குடிநீர் பிரச்னையும் குறைகிறது.
மேலும், காரைக்கால் மாவட்டத்தில் அரசலாறு, திருமலைராஜனாறு உள்ளிட்ட சில ஆறுகளின் குறுக்கே கடைமடை நீர்த் தேக்க அணை (பெட்டேம்) கட்டப்பட்டுள்ளது. இது கடல் நீர் ஆற்றின் வழியே நிலத்திற்கு பாயாமல் தடுப்பதோடு, நிலத்தடி நீரை வளம் பெற செய்கிறது என்கின்றனர் விவசாயிகள்.
ஏரிகள் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கும்போது கூடுதலாக ஏரிகள் வெட்ட அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து காரைக்கால் மாவட்ட விவசாயிகள் கூறியது:
தற்போது உள்ள ஏரிகள்போல, காரைக்காலில் மேலும் 5, 6 இடங்களில் ஏரிகள் வெட்ட அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், என்ன காரணத்தினாலோ அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. காரைக்காலில் ஏரிகள் வெட்டாமல் போனால் எதிர்காலத்தில் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்பது குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால்சிங்கை சந்தித்து தெரிவித்துள்ளோம்.
எனவே, விவசாயிகள், பொதுமக்களின் நலன் கருதி, ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட இடங்களில் ஏரிகள் வெட்ட அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள ஏரிகள் இரண்டும் ஆழமில்லாமல் உள்ளன. அவற்றை ஆழப்படுத்த வேண்டும். மேலும், அவற்றைச் சுற்றி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
பருவநிலை மாறுபாடு, வெள்ளம் போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடரும்போது, எந்தவித இடர்பாடுகளுமின்றி விவசாயம் மேற்கொள்ள ஏரித் தண்ணீர் பயன்படுகிறது. வீணாகக் கடலில் சென்று கலக்காமல், மழை நீரைத் தேக்கிவைக்க மாவட்டத்தில் கூடுதலாக ஏரிகள் வெட்ட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
