குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கட்சிக் கொடிகள்?

திருச்சி, ஜூன் 18: குற்றவாளிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களையும், கட்சிக் கொடிகளையும் பயன்படுத்தி வரும் நிலை தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்
Updated on
2 min read

திருச்சி, ஜூன் 18: குற்றவாளிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களையும், கட்சிக் கொடிகளையும் பயன்படுத்தி வரும் நிலை தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் பாளை. து. அமரமூர்த்தியின் தம்பி மகன் தர்மதுரை (15) அண்மையில் கடத்தப்பட்டு, பெரும் சிரமத்துக்குப் பிறகு மீட்கப்பட்டார்.

  இந்தச் சம்பவத்தில் ஏற்கெனவே எம்எல்ஏ பாளை து. அமரமூர்த்தியிடம் ஓட்டுநராகப் பணியாற்றி வேலை நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டன் (29) தனது நண்பருடன் இணைந்து ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

  மணிகண்டன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரது நண்பர் மதர்ஷாவை (27)  போலீஸôர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் போலீஸôர் சிறப்பாக செயல்பட்டு சிறுவனை மீட்டுள்ளதாக சட்டப்பேரவை உறுப்பினர் அமரமூர்த்தி உள்ளிட்ட சிறுவனின் குடும்பத்தார் அனைவருமே பாராட்டினர்.

  கடத்தப்பட்ட சிறுவனின் கை மற்றும் கால்களைக் கட்டிய கடத்தல்காரர்கள் அவன் தப்பித்துவிடாமல் இருப்பதற்காக காரில் இருந்து இறங்காதபடி இரண்டு நாள்களாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.

  தமிழகம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறும் போலீஸôரால் அந்த காரை மடக்கி பிடிக்க முடியவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்.

  சிறுவனைக் கடத்தியபோது காரில் பயன்படுத்திய பதிவு எண்ணை சில நிமிஷங்களிலேயே கடத்தல்காரர்கள் மாற்றியுள்ளனர். ஆனால், அவர்கள் பயன்படுத்திய வாகனமும் திருட்டு வாகனமே.

  இதற்கிடையே, ஒரு கட்டத்தில் குற்றவாளிகளை நெருங்கிய போலீஸôர் சிறுவன் காரில் இருப்பதை உறுதி செய்து கொண்ட போதிலும், அவர்களால் காரை மடக்கிப் பிடிக்க முடிவில்லை.

  இதற்கு போலீஸôர் கூறும் காரணம் தப்பியோடிய மணிகண்டன், கார் பந்தயங்களில் பங்கேற்ற வீரர் என்பதால், காரை வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டார் என்பதுதான். ஆனால், உண்மையில் இன்னொரு காரணத்தையும் போலீஸôர் மறுக்கவில்லை.

  சிறுவனை கடத்திச் சென்ற வாகனத்தில் ஆளும் கட்சியின் கொடி பட்டொளி வீசிப் பறந்ததுதான் மற்றொரு காரணமாகும்.

  காரின் மீது சந்தேகம் ஏற்பட்ட போதிலும், மேல்நடவடிக்கை எடுக்க முடியாமல் அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டது வாகனத்தில் பறந்த இந்தக் கொடியும், அதையும் தாண்டி- காருக்குள்ளிருந்த ஆளுங்கட்சி முக்கியத் தலைவர் ஒருவரின் படமும்.

  குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டனும், மதர்ஷாவும் ஆளும்கட்சியின் உறுப்பினர்களாக கூட இல்லையென்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தச் சம்பவம் ஓர் உதாரணமே.

  மாநிலம் முழுவதும் இதுபோல பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரும், பழைய குற்றவாளிகளும் போலீஸôரிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆளுங்கட்சியின் கொடியைத் தாராளமாகப் பயன்படுத்தி வருவதாகவே கூறப்படுகிறது.

சோதனைச் சாவடிகளும், சுங்கச் சாவடிகளும் இந்தக் கொடிக்கும், படத்துக்கும் "ராயல் சல்யூட்' அடித்து வழிவிடுகின்றன.

  அண்மையில் திருச்சியில் இருந்து தொழிலதிபர் ஒருவரின் கை, கால்களைக் கட்டி காருக்குள் வைத்து சென்னைக்கு கடத்திச் சென்றபோது மதுராந்தகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸôர் கண்டுபிடித்து மீட்டனர். குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

  இதற்குக் காரணம் அந்த காரில் கட்சிக் கொடி ஏதும் கட்டப்படவில்லை. தலைவர்களின் படமும் வைக்கப்படவில்லை. இப்படி பல உதாரணங்களைக்     கூறலாம்.

  இந்த நடைமுறையை உடனடியாக ஒழித்தாக வேண்டிய கட்டாயமான சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையைட்டி, தமிழகம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தும்படி போலீஸôருக்கு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

  ஆனால், சுமை ஏற்றிச் செல்லும் லாரிகள், மினி லாரிகளை மட்டுமே குறிவைத்து போலீஸôர் சோதனையிடுவதற்கு சில "பயனுள்ள' காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும், விலையுயர்ந்த சொகுசு கார்களையும், கொடி கட்டிய கார்களையும் போலீஸôர் கண்காணிக்கத் தவறக் கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com