திருச்சி, மார்ச் 8: திருச்சி மாநகரில் நடைபெற்று வரும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
தமிழகத்திலேயே முதல் முறையாக திருச்சி மாநகரில் கடந்த 2006-ம் ஆண்டு கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இதற்காக மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையில் நவீன வசதிகள் கொண்ட தனி அறை அமைக்கப்பட்டது. இந்த அறையில் இருந்தபடியே மாநகரில் முக்கிய இடங்கள் கண்காணிக்கப்பட்டன.
ரூ. 80 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த முன்மாதிரித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடக்கிவைத்தார். இந்தக் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்ட பிறகு போக்குவரத்து விதிமீறல்கள் ஓரளவு குறையத் தொடங்கின.
மத்திய பேருந்து நிலையத்தில் திருட்டு, ஈவ்டீசிங் போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறாமல் தடுக்கப்பட்டன. இருப்பினும், சில மாதங்கள் மட்டுமே நன்றாகச் செயல்பட்ட கேமராக்கள் பின்னர் வழக்கம்போல பழுதடையத் தொடங்கின.
பராமரிப்பு பணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக முதலில் மத்திய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராக்கள் செயலிழந்தன. படிப்படியாக மாநகரில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கேமராக்களுமே பழுதடைந்தன.
இந்நிலையில், மாநகரில் மீண்டும் கண்காணிப்பு கேமரா அமைக்க அரசு ரூ. 3 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் விலையுயர்ந்த கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.
மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட 12 முக்கிய இடங்களில் உயர் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள சுழல் கேமராக்கள் மூலம் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
மேலும், சோதனைச் சாவடிகளில் 8 கேமராக்களும், புத்தூர் நான்கு சாலை, முத்தரையர் சிலை, தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட போக்குவரத்து சிக்னல்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிக்னல்களில் விதிமுறைகளை மீறுவோர், விபத்துகளை ஏற்படுத்துவோரையும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்பதால், கேமராக்கள் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படும் என போலீஸôரும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர்.
இதற்கான பணி சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குள் அனைத்து கேமராக்களையும் பொருத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அந்த நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம்.
குறிப்பிட்ட நாள்களுக்குள் பணியை முடிக்காவிட்டால், நாளொன்றுக்கு சிறிய தொகை அபராதமாக வசூலிக்கப்படும் என போலீஸôர் கூறி இருந்தனர். இருப்பினும், கேமரா அமைக்கத் தொடங்கி மூன்று மாதங்களாகியும் பணி இதுவரை முடிவடைந்ததாகத் தெரியவில்லை.
இதுகுறித்து ஒப்பந்ததாரர்களிடம் விசாரித்தபோது, கேமராக்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுவிட்டன. சாலைகளில் சில சிக்னல்களில் பொருத்தப்பட்ட கேமராக்களுக்கு இணைப்புக் கொடுப்பதில் பிரச்னை உள்ளது என்றனர். ஆனால், காவல் துறை வட்டாரங்களோ கேமரா அமைக்கப்பட்டாலும் உடனடியாக செயல்பாட்டுக்கு வருமா? என்பது சந்தேகமே!. இதில், வெளியே கூற முடியாத பல பிரச்னைகள் உள்ளன என்கின்றனர்.
கேமரா மூலம் கண்காணிக்கப்படும் பகுதிகளைப் பார்ப்பதற்காக மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறையில் இரண்டு பெரிய தொலைக்காட்சிப் பெட்டிகளும், 5 சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகளும் உள்ளன.
இதேபோல, மாநரக் காவல் ஆணையர், துணை ஆணையர்கள் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் அலுவலகங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேமரா செயல்படத் தொடங்காததால் சில "ஆங்கில' சேனல்கள் பார்ப்பதற்கே தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
எனவே, கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க மாநகரக் காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.