வேதாரண்யம், மே 22: திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் வரையுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகலப் பாதையாக மாற்றி அமைக்கப்படாததால், இங்கு உற்பத்தியாகும் உப்பை வெளியிடங்களுக்கு அனுப்புவதில் பின்னடைவு ஏற்பட்டு, தேக்கமடைந்து வருகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த அகஸ்தியம்பள்ளிவரை உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது.
இதன்மூலம் காலை, மாலை, இரவு நேரங்களில் இயக்கப்பட்ட ரயில் மூலம் கோடியக்கரை வன, உயிரின சரணாலயம் ஆகியவற்றைக் காண வந்த வெளிநாட்டினர் உள்ளிட்ட பலருக்கும் பயனளித்து வந்தது.
பின்னர், 1990-களில் பயணிகள் ரயில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், 1999 முதல் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி வரை இயக்கப்பட்ட ரயில் பஸ், இடைப்பட்ட சிறிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் அமைப்பைப் பெற்றிருந்தது.
2004, டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி தாக்குதல்
நாளன்று காலையுடன் ரயில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பயணிகள் தவிர இங்கு உற்பத்தியாகும் புகையிலை, உப்பு, மீன் ஏற்றுமதிக்கும் ரயில் போக்குவரத்து உதவியாக இருந்தது.
இங்கிருந்து இயக்கப்பட்ட சரக்கு ரயில் மூலம் ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உப்பு விற்பனைக்காக அனுப்பிவைக்கப்பட்டு வந்தது.
இதனால், உப்பு உற்பத்தி ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் டன்களாக உயர்ந்தது. இதன்மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 20 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
1993-ல் கர்நாடகம் உள்ளிட்ட பெரும்பாலான மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகலப் பாதையாக மாற்றியமைக்கப்பட்டன. மீட்டர்கேஜ் வழித் தடத்தில் எடுத்துச் செல்லப்படும் உப்பு அகலப் பாதைத் தடத்தில் மாற்றியமைத்து அனுப்புவதில் கூடுதல் செலவினங்கள் ஏற்பட்டன.
இதனால், சரக்கு ரயில் மூலமாக உப்பு அனுப்புவது வெகுவாகக் குறைந்தது. தரைவழித் தடத்தில் லாரிகளில் அனுப்பக் கூடுதல் வாடகை, கால விரயம் ஏற்பட்டதால், உற்பத்திச் செலவினம் அதிகரித்து உற்பத்தியில் மெல்ல, மெல்ல தேக்க நிலை ஏற்பட்டது.
உப்புமூட்டைகளை ஏற்றிச் சென்றதன் மூலம் ரயில்வே துறைக்கும் நல்ல வருவாய் கிடைத்தது. உதாரணமாக, 1991-1992 ஆம் ஆண்டில் ரூ. 2 கோடியே 23 லட்சம் வருவாயை அகஸ்தியம்பள்ளி ரயில் நிலையம் மூலம் பெற்றது. சரக்கு ரயிலும் நிறுத்தப்பட்டதால், ரயில்வே துறை இதன்மூலம் பெற்று வந்த வருவாயை இழந்தது.
தற்போது அகலப் பாதையாக மாற்றப்படாததால் பயணிகள் ரயில், ரயில் பஸ், சரக்கு ரயில் என அனைத்தும் நிறுத்தப்பட்டு, ரயில் பாதை பயனற்று உள்ளது.
இந்த ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றியமைத்து மீண்டும் பயணிகள் மற்றும் சரக்கு ரயிலை இயக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
கடந்த 2007-08 ஆம் ஆண்டு மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கையில், இந்த ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றியமைக்க ரூ. 10 கோடி அறிவிக்கப்பட்டது.
ஆனால், எந்தவிதமான பணிகளும் செயல்வடிவத்துக்கு வரவில்லை.
தேக்கமடையும் உப்பு:
வேதாரண்யம் பகுதியில் உற்பத்தியாகும் உப்பை தரைவழியாக வெளியிடங்களுக்கு அனுப்புவதில் பல்வேறு வகையான பிரச்னைகள் உள்ளன.
இந்நிலையில், சென்ற ஆண்டு நிலவிய கடும் வெயிலின் காரணமாக உப்பு விளைச்சல் அதிகரித்தது. ஆனால், உடனடியாக வெளியில் அனுப்ப முடியாமல் 40 ஆயிரம் டன் உப்பு தேக்கமடைந்தது. இந்நிலையில், நிகழாண்டு உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
விற்பனை வாய்ப்பு இல்லாமையால் உப்பு தேக்கமடைவதுடன், சந்தைப் போட்டி இல்லாமையால் உரிய விலை கிடைக்கவும் வாய்ப்பில்லாமல் போகிறது.
எனவே, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்த உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற வேதாரண்யத்தில் அகல ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.