பயன்பாட்டுக்கு வராத அரசுத் திட்ட கட்டுமானங்கள்

வேதாரண்யம், நவ. 8:  அரசின் பல்நோக்குத் திட்ட கட்டுமானங்கள் மக்களுக்கு தொடர்பில்லாத இடங்களில் அமைக்கப்படுவதால், அவை பயன்பாட்டுக்கு வராமலும், சில சமயம் பராமரிக்கப்படாமலும் முடங்கிக் கிடக்கின்றன.    மத்த
Updated on
2 min read

வேதாரண்யம், நவ. 8:  அரசின் பல்நோக்குத் திட்ட கட்டுமானங்கள் மக்களுக்கு தொடர்பில்லாத இடங்களில் அமைக்கப்படுவதால், அவை பயன்பாட்டுக்கு வராமலும், சில சமயம் பராமரிக்கப்படாமலும் முடங்கிக் கிடக்கின்றன.

   மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்கள், பல்நோக்குத் திட்டங்களுக்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இவை உரிய இடங்களில் அமைக்கப்படாமல், மக்கள் போக்குவரத்து அற்ற இடங்களிலோ அல்லது அவர்களின் அன்றாடக் கண்காணிப்பில் இல்லாத வகையிலோ அமைக்கப்படும் போது, அவை பயன்பாட்டுக்கு வருவதில்லை. இதனால், அந்தத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், அதற்கான நிதியும் வீணாகிறது.

  பல திட்டங்களில் கட்டுமானத்துக்கு ஆகும் திட்ட மதிப்பீட்டு நிதியை ஒதுக்கீடு செய்யும் மத்திய, மாநில அரசுகள், அந்தக் கட்டுமானத்துக்கான இடத்தை அரசு புறம்போக்கு அல்லது நன்கொடையாளர் நிலங்களிலிருந்து மட்டுமே தேர்வு செய்யும் நிலை உள்ளது.

   அவ்வாறு தேர்வு செய்யப்படும் இடம் பல பகுதிகளில் தகுதிக் குறைபாடுகளுடனும், மக்கள் எளிதில் பயன்படுத்த முடியாத பகுதிகளிலும் அமைந்து விடுகின்றன. இதனால், அந்தத் திட்டத்தின் நோக்கமே நிறைவேறாமல் போகிறது.

   குறிப்பாக, சுகாதாரத்தை மையமாக வைத்து, மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிடுகிறது. ஆனால், இதற்காக உருவாக்கப்படும் திட்டச் செயல்பாடுகள் பல இடங்களில் பலனளிக்காமல் பெயரளவில்தான் உள்ளன.

  கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. இந்த வளாகம் தலா ரூ. 2,25,000 செலவில் கட்டப்பட்டது.   இதேபோல, ஊராட்சிக்கு ஒரு குப்பைக் கிடங்கு அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டது. இதற்காக ஊராட்சி ஒன்றுக்கு ரூ. 50,000 வரை செலவிடப்பட்டு, மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளுக்கான பிரிவுகள் உருவாக்கப்பட்டு, கிடங்குகள் அமைக்கப்பட்டன.  ஆனால், இவை ஊருக்கு வெளியே அமைக்கப்பட்டதோடு, கிராமப் பகுதிகளில் குப்பைகளைப் பிரித்து சேகரித்து, அவற்றை மக்கச் செய்து உரமாக்குவதில் போதிய கவனம் செலுத்தப்படாததால், இந்தத் திட்டம் பல இடங்களில் கிடப்பில் போடப்பட்டது.    இதுபோன்று பல திட்டங்களுக்கான கட்டமைப்புகள் மக்களுக்குத் தொடர்பில்லாத இடங்களில் அமைக்கப்பட்டதாலும், சரியான இடங்களில் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள் தொடர்ந்து பராமரிக்கப்படாததாலும் வீணாகி வருகின்றன.   மகளிர் சுகாதார வளாகங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பராமரிக்க அளிக்கப்பட்ட நிதியும் ஓராண்டுடன் நிறுத்தப்பட்டது. இதனால், பெரும்பாலான இடங்களில் இவை பராமரிக்கப்படாமல் பயனின்றிக் கிடந்து, சுற்றுச்சூழலைக் கெடுப்பதோடு, பொதுமக்கள் திறந்தவெளியைப் பயன்படுத்துவதால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.  நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த மருதூர் தெற்கு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கு மயானத்திற்கு அருகே அமைந்துள்ளது. அது தற்போது தண்ணீர் தேங்கும் குளமாக உள்ளது.    இதேபோல, வேதாரண்யம் மருத்துவமனையின் பின்புறம் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் பூட்டிய நிலையில் முள்புதர் மண்டிக் காணப்படுகிறது.  அவ்வப்போது மாறி மாறி அமையும் அரசுகளால் கொண்டுவரப்படும் திட்டங்கள் யாவும் மக்களுக்காவே உருவாக்கப்படுகின்றன. அவற்றை மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப, பொருத்தமான இடத்தில் அமைத்து, தொடர் பராமரிப்புக்கு வகைசெய்தால் மட்டுமே திட்டத்தின் நோக்கமும், நிதியும் வீணாகாமல் தடுக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com