கல்விக் கடன் வங்கிகள் இடையே முரண்பாடு

சீர்காழி, நவ. 14: நாகை மாவட்டம், சீர்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கெடுபிடிகளைத் தளர்த்தியும், முரண்பாடுகளைக் களைந்தும் கல்விக் கடனை முழுமையாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந

சீர்காழி, நவ. 14: நாகை மாவட்டம், சீர்காழியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கெடுபிடிகளைத் தளர்த்தியும், முரண்பாடுகளைக் களைந்தும் கல்விக் கடனை முழுமையாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

    சீர்காழி வட்டத்தில் உள்ள மக்கள் விவசாயத்தையே சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் பல குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர், பள்ளிகளுக்கே சென்றதில்லை. விவசாய வேலைக்குச் செல்லும் அவர்கள், வறுமையின் காரணமாக தங்கள் குழந்தைகளை எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மேல் படிக்க வைப்பதில்லை.

  இதனால், உயர் வகுப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள்கூட, கட்டட வேலைகளுக்கும், டீ கடைகளிலும் பணியாற்றும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

     இத்தகைய ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களின் கல்விக்காக மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. ஆனால், அதிகாரிகளின் கெடுபிடி, மெத்தனத்தால் மாணவர்களுக்கு அந்த உதவிகள் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

      குறிப்பாக, கல்லூரியில் சென்று சேரும் ஏழை மாணவர்களுக்கு சீர்காழியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கல்விக் கடன் கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் காணப்படுகின்றன. முக்கியமாக, முழுமையான அளவில் கடன் கிடைப்பதில்லை; கல்விக் கடனிலும் வங்கிகளிடையே பெரும் முரண்பாடு உள்ளது என மாணவர்கள் புகார் கூறுகின்றனர்.

       இதுமட்டுமல்லாது, இந்தப் பகுதியில் உள்ள வங்கிகள் சுற்றியுள்ள ஒரு குறிப்பிட்ட கிராமத்தை தத்தெடுத்துக் கொண்டு, அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே தங்கள் வங்கியில் கடன் வழங்கப்படும் என்றும், இதுபோன்ற ஏராளமான விதிமுறைகளைக் கொண்டும் செயல்பட்டு வருகின்றன.  

       கல்வி நிறுவனங்கள் குறிப்பிட்ட படிப்புகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும் என்று பட்டியலிட்டு மாணவர்களிடம் தந்துவிடுகின்றன. உதாரணமாக, பி.எட். படிக்க ரூ. 45 ஆயிரம் செலவாகும் எனக் கல்வி நிறுவனம் பட்டியல் தருவதாகக் கொள்வோம்.

      அந்தப் படிப்புக்கு சீர்காழியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் ரூ. 9 ஆயிரமும், மற்றொரு வங்கியில் ரூ. 20 ஆயிரமும் என ஒவ்வொரு வங்கியிலும் ஒவ்வொரு தொகை கடனாக வழங்கப்படுகிறது. சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகையையாவது கடனாக வழங்குகின்றன. சில வங்கிகள் அந்தத் தொகையையும் வழங்குவதில்லை. இதனால் பாதிக்கப்படும் மாணவர்கள் தங்கள் படிப்பை இடையிலேயே நிறுத்த வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.

      அந்óதக் குறிப்பிட்ட கடன் தொகையை வாங்கவுமே, மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அந்த வங்கிக்கு நடையாய் நடக்க வேண்டும்.

      அதிகாரிகளின் கெடுபிடி, மெத்தனம், விதிமுறைகள் உள்ளிட்டவற்றால் சீர்காழி பகுதி மாணவர்களுக்கு கல்விக் கடன் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.   

     இதுகுறித்து இந்தப் பகுதியில் இயங்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் ஒருவர் கூறியது:

      அரசின் ஆணைப்படி கல்விக் கடனை வழங்கி வருகிறோம். வங்கிகளில் எந்தப் படிப்புக்கு எவ்வளவு தொகை கடனாக அளிக்க வேண்டும் என்று விதி உள்ளது. இந்த விதியின்படியே கடன்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதனாலேயே வங்கிகளின் கல்விக் கடனில் வித்தியாசம் காணப்படுகிறது என்றார் அவர்.

      கல்விக் கடனில் வங்கிகள் கடைப்பிடிக்கும் முரண்பாட்டால் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் மேல் படிப்பைத் தொடர முடியாத அவல நிலை உருவாகி வருகிறது. கல்விக் கடனில் நிலவும் முரண்பாட்டைக் களைந்து, கடன் தொகையை முழுமையாக வழங்கிட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர், மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com