திருச்சி, நவ. 25: திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் ஒரே வாரத்தில் நான்கு கோயில்களில் உண்டியல்களை குறிவைத்து திருடிய கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீஸôர் திணறி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. சிறுகனூர் அருகேயுள்ள திருப்பட்டூர் பிரம்மா கோயில் மிகவும் புகழ்பெற்றது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஓரளவு பாதுகாப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.
ஆனால், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு கோயிலான திருப்பட்டூர் காசி விசுவநாதர் கோயிலில் போதிய பாதுகாப்பு இல்லை என்பது அந்தப் பகுதி மக்களின் குற்றச்சாட்டு.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு காசி விசுவநாதர் கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த உண்டியலின் மேல்பகுதியை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் பற்றிய பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த திங்கள்கிழமை இரவு சிறுகனூர் சிவன் கோயில் மற்றும் செல்லாண்டியம்மன் கோயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த உண்டியலை தூக்கிச் சென்றனர்.
உண்டியலை உடைத்து பணத்தை எடுத்த பிறகு அருகிலுள்ள வாய்க்காலில் உடைக்கப்பட்ட உண்டியலை கொள்ளையர்கள் வீசிச் சென்றனர்.
மேலும், சிவனுக்கு நெற்றியில் அணிவிக்கப்படும் வெள்ளிப் பட்டையையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சிறுகனூரில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் புதன்கிழமை இரவு புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை அடிப்பகுதியோடு பெயர்த்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிறுகனூர் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே வாரத்தில் மட்டும் சிறுகனூர் காவல் எல்லைப் பகுதியில் நான்கு கோயில்களில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், போலீஸôர் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
நான்கு சம்பவங்களுமே ஒரே மாதிரியாக நடைபெற்று இருப்பதால் போலீஸôர் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக, திருப்பட்டூர் காசி விசுவநாதர் கோயிலில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களால் சிறுகனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஆனால், காவல் துறை தரப்பில் வழக்கமான வழக்குப் பதிவோடு முடித்துக் கொண்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கோயில்களில் திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு பெரிய அளவில் இல்லையென்றாலும், தொடர்ந்து கோயில்களை குறிவைத்து நடத்தப்படும் திருட்டு போலீஸôருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சில போலீஸôர் கூறியது:
"திருச்சி மாவட்டத்திலேயே அதிகளவில் விபத்து நடைபெறும் பகுதி எங்கள் எல்லையான சிறுகனூர்தான். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் வருவதால் எங்களால் அதைக் கவனிக்கவே சரியாக இருக்கிறது.
இங்கு ஆய்வாளராகப் பணியாற்றியவர் கைத்துப்பாக்கியால் சுட்டதால் எழுந்த சர்ச்சையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நீண்ட நாள்களாக காலியாக இருந்த அந்தப் பதவிக்கு புதன்கிழமைதான் புதிய ஆய்வாளர் பொறுப்பேற்றுள்ளார். மேலும், மூன்று உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளோம். அதிக அளவில் பணிச் சுமை இருப்பதால் இரவு ரோந்து செல்வதற்கு போதிய ஆள்கள் இல்லை.
திருட்டைத் தடுக்கும் வகையில் சிறப்புப் பிரிவு அமைத்து பழைய குற்றவாளிகளைக் கண்காணித்தால் ஓரளவு குற்றத்தைத் தடுக்க முடியும். இதுகுறித்து உயர் அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.