மயிலாடுதுறை ஒன்றிய புதிய அலுவலக கட்டுமானப் பணிகள் தொடங்கப்படுமா?

மயிலாடுதுறை, செப். 30 : மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட அரசு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் கிடப்பில் போடப்பட்டுளன. இதன் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க
Updated on
2 min read

மயிலாடுதுறை, செப். 30 : மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு, புதிய கட்டடம் கட்ட அரசு ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் கிடப்பில் போடப்பட்டுளன. இதன் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 நாகை மாவட்டத்தில் 54 ஊராட்சிகளைக் கொண்ட 2-வது பெரிய ஊராட்சி ஒன்றியம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியமாகும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் உருவானபோது, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்பட்டு, அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக (சென்னை மாநிலம்) இருந்த எம். பக்தவச்சலம் 1.2.1958-ல் திறந்து வைத்தார்.

 இதன் மூலம் 54 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். பின்னர், இந்த அலுவலகத்தின் அருகில், மக்கள் பிரதிநிதிகள் அமர, கூட்டு அமர்வுக் கூடம் கட்டுவதகற்கு ஒப்புதல் பெறப்பட்டு, சென்னை மாநில முதன்மைச் செயலராக இருந்த ஆர். ஏ. கோபால்சாமியால் 1961-ல் அடிக்கல் நாட்டப்பட்டது, மூன்றாண்டுகளுக்கு பிறகு கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று, தஞ்சை ஆட்சியராக இருந்த பி.என், வேதநாராயணன் 19.8.1963-ல் இதைத் திறந்து வைத்தார்.

 இந்நிலையில், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு,ரூ. 1.50 கோடி நிதி ஒத்துக்கீடு செய்தது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணி ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

 இதற்கிடையில், ஒன்றிய அலுவலகம், மயிலாடுதுறையிலுருந்து 3 கி.மீ தொலைவிலுள்ள சித்தர்காட்டிற்கு (அண்ணா திருமண மண்டபம்) மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, பழைய அலுவலகத்தில் எந்த அறிவிப்போ அல்லது விளம்பரமோ வைக்கப்படவில்லை என்பதால், பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து குழப்பமடைகின்றனர்.

 பின்னர் விசாரித்து, சித்தர்காட்டில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று தஙகளது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

 இதேபோல, இந்த அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளை நூலகமும் எந்த அறவிப்பும் இன்றி, கூறைநாடு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 இதனால், நூலகத்திற்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் வாசகர்கள், நூலகம் எங்கே சென்றது என்று தேடுகின்றனர். இந்நிலையில் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை இடித்து அப்புறப்படுத்துவதற்கான பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அலுவலகக் கதவுகள் திறந்தே கிடப்பதால், இங்கு சிலர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதுகுறித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எம். மூர்த்தியிடம் கேட்டபோது, பழையக் கட்டடத்தை இடிக்கும் பணி அக்.5-ம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்குப் பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார்.

 ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கேட்டபோது, புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி விடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது என்றும் கூறினார்.

 ஏற்கெனவே, மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், பாராமரிப்பில்லாத சாலைகள், அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவமனை போன்றவற்றால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் அறிவிப்பின்றி மாற்றப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஊராட்சி ஒன்றிய புதிய அலுவகக் கட்டுமானப் பணியை விரைவில் தொடங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com