திருவாரூரில் புதை குழியான சாலைகள்

திருவாரூர், அக். 7: திருவாரூர் நகரில் செயல்படுத்தப்படும் புதை சாக்கடைத் திட்டப் பணியில் முறையான திட்டமிடல் இல்லாததால், நகரெங்கும் புதை குழிகளாக உள்ள சாலைகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியு

திருவாரூர், அக். 7: திருவாரூர் நகரில் செயல்படுத்தப்படும் புதை சாக்கடைத் திட்டப் பணியில் முறையான திட்டமிடல் இல்லாததால், நகரெங்கும் புதை குழிகளாக உள்ள சாலைகளால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

திருவாரூர் நகராட்சியில் இந்தத் திட்டம் கடந்த 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ரூ. 40 கோடியில் ஏறத்தாழ 85 கிலோ மீட்டர் தொலைவுக்கு குழாய்கள் அமைக்கும் பணி, 7 இடங்களில் கழிவுநீரேற்று நிலையங்கள், அனைத்து கழிவுநீரையும் சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம் எனப் பணிகள் திட்டமிடப்பட்டன. இந்தப் பணியை 18 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும், இதுவரை 60 சதவீதப் பணிகளே முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முறையான திட்டமிடலின்றி தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு என, குழாய்கள் பதிக்க தோண்டப்படாத சாலைகளே இல்லை என்ற அளவுக்கு அனைத்துச் சாலைகளும் தோண்டப்பட்டு, ஆங்காங்கே பணிகள் முடிக்கப்படாமல், பாதுகாப்பற்ற நிலையில் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளன.

குழாய்கள் பதிக்கவும், ஆள் இறங்கும் தொட்டிகள் அமைக்கவும் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் குண்டும், குழியுமாக இருந்த சாலை, கடந்த ஓராண்டுக்கும் மேலாக செப்பனிடப்படாமல் இருந்தது.

இதையடுத்து, தென்றல் நகரில் உள்ள குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தங்களது சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் குறிப்பிட்ட தொகையை வசூலித்து, தாங்களாகவே செங்கல், ஜல்லி, மணல் ஆகியவற்றை வாங்கி, பழுதடைந்த சாலைகளை ஒரளவுக்கு இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை செல்லும் அளவுக்கு சரிசெய்தனர்.

கடந்த மாதம் பிரதான சாலையான திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் புதுத் தெருவில் புதை சாக்கடைத் திட்டப் பணிக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு, குழாய்கள் பதிக்கப்பட்டன. இந்தப் பணி காரணமாக மயிலாடுதுறை வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் 15 கிலோ மீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நகர விரிவாக்கப் பகுதியான நாலுகால் மண்டபம், இ.பி. காலனி, வண்டாம்பாளை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நகருக்குள் வரும் மக்கள் காலை, மாலை வேளைகளில் அரை கிலோ மீட்டர் தொலைவுள்ள புதுத் தெருவைக் கடக்க ஏறத்தாழ ஒரு மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது. இந்த நிலையில், அக். 10-ம் தேதி தமிழக முதல்வர் இந்த வழியாகச் செல்ல இருப்பதால், இந்தச் சாலையில் அவசர அவசரமாக தார் போடப்பட்டுள்ளது.

இதேபோன்று பிரதான கடைத் தெரு பகுதியிலும், பழைய நாகை சாலை, மார்க்கெட் சாலை ஆகிய இடங்களிலும் குழாய்கள் பதிக்கப்பட்டுவிட்டன. ஆனால், இதற்கென தோண்டப்பட்ட மண், சாலை முழுவதும் பரவி, அடிக்கடி பெய்யும் மழையால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது.

இதுகுறித்து எக்ஸ்னோரா செயலர் ஜி. வரதராஜன் கூறியது:

பல இடங்களில் ஒரே நேரத்தில் மிகக் குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு நடைபெறும் பணிகளால் எந்த இடத்திலும் பணி முழுமை பெறவில்லை. அதோடு, நடைபெறும் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்களைக் கொண்டு முறையாகக் கண்காணிக்கவும் இல்லை.

பல இடங்களில் இதற்குப் பயன்படுத்தப்படும் செங்கல் மற்றும் மூலப் பொருள்கள் தரமற்றதாக உள்ளதாக நகர்மன்ற உறுப்பினர்களே நகர்மன்றக் கூட்டங்களில் குற்றஞ்சாட்டியுள்ளனர். திட்டம் பயன்பாட்டுக்கு வருவதற்குள்ளாகவே பல இடங்களில் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், உரிய திட்டமிடல் இல்லாததால், ஒரு முறை தோண்டி குழாய் பதித்த இடங்களிலேயே, மீண்டும் தோண்டும் நிலையும் உள்ளது. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் என்றார் அவர்.

புதை சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றி, மக்களை சுகாதாரக் கேட்டிலிருந்து பாதுகாக்கப் போகிறோம் எனக் கூறிய நிலையில், பணிகளை முடிப்பதற்குள் மக்களுக்கு உடல் வலியோடு, தொற்றுநோய்களும் ஏற்பட இந்தத் திட்டமே காரணமாகிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர் திருவாரூர் மக்கள்.

திருவாரூர் நகராட்சியில் சாலைகளை சிமென்ட் சாலையாக மாற்ற தமிழக அரசு முதல் கட்டமாக ரூ. 5.40 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தச் சாலைகளை அமைப்பதற்கு முன்பாக, புதை சாக்கடைத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் தார்ச் சாலையில் பரவிக் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்தி, இரு சக்கர வாகனங்கள் சிக்கலின்றி சென்று வர தொடர்புடைய அரசுத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருவாரூர் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com