ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுமா?

திருச்சி, அக். 7: குற்றச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்
Updated on
2 min read

திருச்சி, அக். 7: குற்றச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய தங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என ரயில்வே பாதுகாப்புப் படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான பொருள்களை பாதுகாப்பது, ரயிலில் பயணம் செய்வோரின் உடைமைகளைப் பாதுகாப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதே ரயில்வே பாதுகாப்பு படையின் முக்கியப் பணி.

இந்திய அளவில் ஏறத்தாழ 67,000 பேரும், தெற்கு ரயில்வேயில் ஏறத்தாழ 4,500 பேரும் ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள நான்கு கோட்டங்களிலும் ஏறத்தாழ 70 ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையங்கள் உள்ளன.

செயல்பாட்டு அளவில் இவை காவல் நிலையங்களாக இருந்தாலும், பணி என்னவோ பாதுகாப்பு மேற்கொள்வது மட்டுமே. குற்றச் சம்பவங்கள் தொடர்பாக இவர்கள் வழக்கு ஏதும் பதிவு செய்ய முடியாது.

ரயில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வோர், ரயில் நிலையங்களில் நடைமேடைகளைப் பயன்படுத்தாமல் தண்டவாளத்தைக் கடந்து செல்லுவோர், ரயில் நிலையங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித் திரிவோர் போன்ற பிரிவின் கீழ் மட்டுமே ரயில்வே பாதுகாப்பு படையினரால் வழக்குப் பதிவு செய்ய முடியும்.

பொதுவாக, ரயில் நிலையத்திலோ அல்லது ஓடும் ரயிலிலோ திருட்டு நடந்து குற்றவாளியைப் பிடித்தால், அவர்களை அருகிலுள்ள ரயில்வே காவல் நிலையத்தில் (தமிழக காவல் துறை நிர்வாகத்துக்குள்பட்டது) மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறை.

மேலும், சந்தேகத்தின் பேரில் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரிக்கும்போது அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டாலும், அவரிடம் மேற்கொண்டு எந்த விசாரணையையும் ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ள முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

குற்றச் சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தங்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக ரயில்வே பாதுகாப்புப் படையினர் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

தங்களது சங்கமான ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கத்தின் மூலம் இந்தக் கோரிக்கை தொடர்பாக பலமுறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறியது:

"பாதுகாப்புப் படை என்பது பெயரளவில் இருந்தாலும், நாங்கள் முழுக்க முழுக்க ஒரு காவல் நிலையம் எப்படிச் செயல்படுகிறதோ அதன்படியே எங்களது நிர்வாகம் இருக்கும். ஆனால், இந்திய குற்றவியல் சட்டப்படி எங்களால் எந்த வழக்கும் பதிவு செய்ய முடியாது.

உண்மையைக் கூற வேண்டுமானால், நாங்கள் எவ்வளவு பெரிய குற்றவாளியைப் பிடித்தாலும் பெயர் வாங்குவது தமிழகக் காவல் துறையே. இருப்பினும், அவர்கள் எங்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது கிடையாது.

ஒரு குற்றவாளியைப் பிடித்து ரயில்வே காவல் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திலோ ஒப்படைத்தால், அவர்கள் வழக்குப் பதிவு செய்வதில் வேண்டுமென்றே தாமதப்படுத்துவார்கள். சில நேரங்களில் பேரமும் நடப்பதுண்டு.

நாங்கள் பிடித்த எத்தனையோ குற்றவாளிகள் எளிதில் தப்பித்துள்ளனர். பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய ஒருவரைப் பிடித்து ரயில்வே காவல் நிலையத்தில் ஓப்படைத்தால், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு குறைந்த தண்டனை கிடைக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்து அனுப்பிவைத்துவிடுகின்றனர். குறிப்பாக, "கிராசிங்' இடங்களில் நிற்கும் ரயில்களில்தான் திருட்டு அதிகம் நடைபெறுகிறது. ஆனால், இதைக் கண்காணிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையங்களுக்கு வழக்குப் பதிவு செய்யும் அதிகாரம் வழங்குவதன் மூலம் இதற்குத் தீர்வு காண வழி உள்ளது.

நீண்ட நாள்களாக இருந்து வரும் இந்த பிரச்னை குறித்து அகில இந்திய ரயில்வே பாதுகாப்புப் படை சங்கத் தலைவர் ஏ. கலையரசன் கூறியது:

"வளர்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் முறையைப் போல, நமது நாட்டில் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை அமைத்து, அவர்களையே அனைத்துப் பொறுப்புகளையும் கவனிக்கச் செய்தால் ரயில்களில் குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com