கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுமா?

கந்தர்வகோட்டை, அக். 19: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடத்தப்பட வேண்டும் என்று இப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.  கந்தர்வக
Updated on
1 min read

கந்தர்வகோட்டை, அக். 19: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடத்தப்பட வேண்டும் என்று இப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயில் பழைமை வாய்ந்த சிறப்புடையது. இந்தக் கோயில் பாண்டிய மன்னரால் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக் கோயில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.

 இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் திருவிழா அந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் முடிவடையும்.

 இந்தத் திருவிழாவில் கந்தர்வகோட்டை பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 130 கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடிகள், பால்குடங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து, தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வர்.

 விழா நடைபெறும் காலங்களில் முத்துப் பல்லக்கில் மலரால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வாணவேடிக்கைகள் முழங்க ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் திருவீதியுலா வருவது வழக்கம்.

 அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இந்தக் கோயிலில் தங்கி அம்மை நோயைக் குணப்படுத்திக் கொள்வர். ஆனால், கோயிலின் சுற்றுப்புறமானது மிகவும் சீர்குலைந்து உள்ளது. தற்போது, இக் கோயில் கோபுரத்தின் மீது செடி, கொடிகள் படர்ந்து புதர்போலக் காட்சியளிக்கிறது.

 மேலும், கோயிலின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இக் கோயிலில் தங்குவதற்கு அஞ்சும் நிலை உள்ளது.

 இதுகுறித்து இந்தக் கோயில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ஆர். பாலாஜி கூறியது:

 இந்தக் கோயிலில் திருப்பணிகளை நடத்துவதற்கு எவ்வித நிதி உதவியும் இல்லாததால், திருப்பணி நடத்த முடியாத நிலை உள்ளது. தற்போது, இந்து சமய அறநிலையத் துறையிடம், கோயிலில் திருப்பணிகள் நடத்த நிதி கேட்டுள்ளோம். நிதி கிடைத்தவுடன் இப் பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் ஆதரவுடன் கோயில் திருப்பணியைத் தொடங்குவோம் என்றார் அவர்.

 எனவே, பழைமை வாய்ந்த கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை முன் வர வேண்டும் என்கின்றனர் இப் பகுதி மக்கள் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com