பாதுகாப்பு இல்லாத பட்டாசுக் கடைகள் கண்காணிக்கப்படுமா?

திருச்சி, அக். 21: தமிழகத்தில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் பெரும்பாலானவை போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் உள்ளதாகவும், இந்தக் கடைகளைக் கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்
Updated on
2 min read

திருச்சி, அக். 21: தமிழகத்தில் தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பட்டாசுக் கடைகளில் பெரும்பாலானவை போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் உள்ளதாகவும், இந்தக் கடைகளைக் கண்காணித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

   தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே இருப்பதால், தமிழகத்தில் பட்டாசு விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்தாண்டைப் போல இந்த ஆண்டும் வழக்கம்போல 1000-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் ஆங்காங்கே தாற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன.

   பட்டாசுக் கடைகள் நடத்துவதற்கென்று சில விதிமுறைகளை அரசு அறிவித்திருந்தாலும், பல இடங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசுக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

   மாநகரப் பகுதியில் கடை நடத்துவோர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்திலும், ஊரகப் பகுதியில் கடை நடத்துவோர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் உரிமம் பெற வேண்டும்.

   மேலும், தாங்கள் வைத்துள்ள கடைக்கு அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையத்துக்கும் அவர்கள் கண்டிப்பாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

   திருச்சி மாநகரப் பகுதியில் ஏறத்தாழ 30 பெரிய கடைகளும், ஊரகப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 150 கடைகள் முறையாக உரிமம் பெற்றவை. ஆனால், உரிமம் பெறாமலும் ஏராளமான கடைகள் உள்ளன.

   இவற்றில் பெரும்பாலானவை மக்கள் அதிகம் கூடும் இடங்களில்தான் உள்ளன. உரிய பாதுகாப்பு வசதிகளைச் செய்துள்ளோம் என்று கூறியே இவர்கள் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட நிர்வாகம், தீயணைப்புப் படை அலுவலகம் ஆகியவற்றில் சான்று பெற்று பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

   விற்பனைக்காக வைக்கப்படும் பட்டாசுகளைத் தவிர மொத்த இருப்புகளை தனியாகக் கிடங்குகளில் வைத்துதான் விற்பனை செய்ய வேண்டும் என்ற விதிமுறை இங்கு முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதைக் கண்காணிப்பது அவசியமானதாகும்.

   ஏனென்றால், மொத்த பட்டாசுகளையும் ஒரே இடத்தில் வைத்து விற்பனை செய்யும்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து நிகழ்ந்தால் பெருமளவில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதுதவிர, உரிமம் பெறாமல் பட்டாசுகளை விற்பனை செய்யும் கடைகளைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஆர்வர்களிடமிருந்து எழுந்துள்ளது.

   உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனையில் ஈடுபடும் பெரும்பாலான வியாபாரிகள் உள்ளூர் அரசியல் முக்கியப் பிரமுகர்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் தொய்வு ஏற்படுவதாகவும் காவல் துறை தரப்பில் கூறுகின்றனர்.

   தனிநபர் லாபம் பெறுவதற்கு உதவி செய்வதைவிட மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழாமல் இல்லை.

   அண்டை மாநிலமான கர்நாடகத்தில், பண்டிகைக் காலங்களில் பட்டாசு விற்பனை நடைபெறுவதற்காகவே பல ஏக்கர் நிலப்பரப்பை ஒதுக்கி அதில் கடை அமைத்து விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

   பட்டாசுக் கடைகள் மட்டுமே இங்கு அமைக்கப்பட்டிருப்பதால் அனைத்துப் பாதுகாப்பு வசதிகளும் முழுமையாகச் செய்யப்பட்டிருக்கும். மக்களும் எந்தவித அச்சமுமின்றி பட்டாசுகளை வாங்கிச் செல்வார்களாம்.

   இதே முறையை தமிழகத்திலும் கடைப்பிடித்தால் பட்டாசுக் கடைகளால் ஏற்படும் விபத்தைத் தடுக்க முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து. நிகழாண்டில் இந்த முறையைக் கடைப்பிடிப்பது சிரமமே.

   எனவே, பாதுகாப்பு வசதிகள் குறைவாக உள்ள கடைகளை கண்காணித்தும், மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் உள்ள கடைகளில் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்ய அரசு உத்தரவிட முன்வந்தால் அசம்பாவிதங்கள் நடப்பதைத் தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com