கந்தர்வகோட்டை, செப். 7: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கந்தர்வகோட்டை 36 ஊராட்சிகள் மற்றும் 110 கிராமங்களுக்கு பிரதானமான ஊராகும். இந்தக் கிராமங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கந்தர்வகோட்டையையே நம்பியுள்ளனர்.
வட்டம் மற்றும் ஒன்றியத் தலைமையிடமான கந்தர்வகோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், சார் பதிவாளர் அலுவலகம், கருவூலம் என ஓர் ஊருக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்புகள் பலவும் உள்ளன. ஆனால், அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான பேருந்து நிலையம் இல்லை.
இத்தனைக்கும் தஞ்சாவூர் - புதுக்கோட்டை தடத்தில் உள்ள முக்கியமான ஊர் இது. சுற்றியுள்ள கிராமத்தினர் வெளியூர்களுக்குச் செல்ல இங்கு வந்தே பேருந்து ஏற வேண்டிய சூழலே உள்ளது. இங்கிருந்து சுமார் 15 நகரப் பேருந்துகள் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கு இயக்கப்படுகின்றன. இத்தனை தேவைகள் இருந்தும் பேருந்து நிலையம் இல்லை.
விளைவு, இந்த வழியாகச் செல்லும் பேருந்துகள் யாவும் சாலையோரத்திலேயே நிறுத்தி, பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
இதனால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் கழிப்பறை, குடிநீர்த் தேவைகளுக்குகூட வசதியில்லாமல் காத்திருப்பதும் பேருந்துகளைக் கண்டவுடன் சாலையிலேயே அவற்றைத் துரத்தி ஓடுவதும் அன்றாடக் காட்சிகளாகிவிட்டன கந்தர்வகோட்டையில்.
இங்கு பேருந்து நிலையம் அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்னரே இடம் ஒதுக்கப்பட்டது. 2004-ல் நபார்டு வங்கியின் உதவியுடன் பேருந்து நிலையம் அமைக்கவும் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், பலனளிக்கவில்லை.
இதுகுறித்து கந்தர்வகோட்டை வர்த்தகர் சங்கத் தலைவர் சேட் கூறியது:
""மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் எனப் பலரிடமும் பல முறை மனு அளித்துவிட்டோம். எவ்விதப் பயனும் இல்லை. மக்கள் எவ்வளவோ சிரமப்படுகின்றனர். குறிப்பாக, மழைக் காலங்களில் படும் சிரமங்கள் சொல்லி மாளாது. ஆனால், என்ன பயன்? எங்கள் சிரமங்களைத் தீர்க்க எவரும் இல்லையே?'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.