தஞ்சை- சென்னை விரைவு பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?

கும்பகோணம், செப். 12:  தஞ்சை மாவட்ட ரயில் பயணிகளின் தேவையை நிறைவு செய்யும் வகையில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட வண்டி எண் 109, வி
Updated on
2 min read

கும்பகோணம், செப். 12:  தஞ்சை மாவட்ட ரயில் பயணிகளின் தேவையை நிறைவு செய்யும் வகையில், சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்ட வண்டி எண் 109, விரைவு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

   சென்னை- மயிலாடுதுறை அகல ரயில் பாதை திறக்கப்பட்டு, 100 நாள்களுக்கு மேலாகியும் போதிய ரயில் சேவை கிடைக்கவில்லை என்று இந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர்.

   கும்பகோணம், மயிலாடுதுறை பகுதி வழியாக சென்னை செல்லும் கம்பன், ராமேசுவரம் (வண்டி எண் 6702) ரயில்கள், நள்ளிரவில் இந்த ரயில் நிலையங்களுக்கு வருகின்றன. இதனால், பயணிகள் தங்கள் தூக்கத்தை தொலைக்க வேண்டிய நிலை உள்ளது.

   இந்தப் பகுதிகளிலிருந்து இரவு நேரம் என்ற பெயரில் நள்ளிரவில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதால், குழந்தைகள், பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த ரயில்களுக்கான முன்பதிவு இந்தப் பகுதியினருக்கு பெரும்பாலும் கிடைப்பதேயில்லை.

   இதனால், நிற்கக்கூட இடமில்லாத நிலையில் பொதுப் பெட்டியில் கடுமையான கூட்ட நெரிசலில் பயணம் செய்யும் அவல நிலை தொடர்கிறது. அதேநேரத்தில், கூட்ட நெரிசல் நேரத்தில் கூடுதல் ரயிலை இயக்கவும் ரயில் நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்ட தஞ்சை- சென்னை (வண்டி எண் 109) விரைவு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   இதுதொடர்பாக பாஜக தேசியக் குழு உறுப்பினரும், சமூக விழிப்புணர்வு இயக்கத் தலைவருமான வழக்குரைஞர் கே. ராஜேந்திரன் கூறியது:

   தஞ்சையிலிருந்து இரவு 8.30 மணிக்கும், கும்பகோணத்திலிருந்து இரவு 9.10 மணிக்கும், மயிலாடுதுறையிலிருந்து இரவு 10 மணிக்கும் புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சென்னையைச் சென்றடையும் வகையிலும், அதேபோல, சென்னையிலிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு அதிகாலை வேளையில் மயிலாடுதுறை, கும்பகோணத்துக்கு வந்து சேரும் வகையிலும் இந்த வழித்தடத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்ட (வண்டி எண் 109) விரைவு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

   மேலும், இந்த ரயிலை நீடுர், குத்தாலம் உள்ளிட்ட சிதம்பரத்துக்கு தெற்கேயுள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் இயக்க வேண்டும்.

இதன்மூலம், திரளான மக்கள் பயன்பெறுவர்.

   இந்த வழித்தடத்தில் சுமார் 5 கி.மீ. இடைவெளியில் 108 சிவாலயங்கள் அமைந்துள்ள பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம், ராகு தலமான திருநாகேசுவரம், சூரியனார்கோயில் அருகேயுள்ள ஆடுதுறை, திருமண பரிகாரத் தலமான திருமணஞ்சேரி அருகில் குத்தாலம், பரமேஸ்வரி மயிலாடிய மயிலாடுதுறை, செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோயில், புவியின் மையமாக விளங்கும் சிதம்பரம் உள்ளிட்ட ஆன்மிக நகரங்கள் உள்ளன. இதனால், திரளான பக்தர்களுக்கு இந்த ரயில் சேவை மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. எனவே, (வண்டி எண் 109) விரைவு பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

   இந்த நிலையில், மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கும் வகையில், திருப்பதி விரைவு ரயில் உள்ளிட்ட எந்த விரைவு ரயிலும் மேற்கண்ட தலங்களில் நிற்காது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

   எனவே, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் திருப்பதி விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் மீது பொது நல வழக்குத் தொடரப்படும் என்றார்

ராஜேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com