திருச்சி, செப். 16: மின்சாரப் பற்றாக்குறையால், திருச்சி - விழுப்புரம் அகல ரயில் பாதையில் மின்சார என்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயநிலை உருவாகியுள்ளது.
திருச்சி - விழுப்புரம் இடையே அகல ரயில் பாதையில் மின்மயமாக்கும் பணிகள் கடந்தாண்டு இறுதியில் முடிவடைந்தன. திருச்சி மக்களின் நீண்ட நாள் கனவான இந்தத் திட்டம் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகே நிறைவேறியது.
இதையடுத்து, கடந்த ஜனவரி 30-ம் தேதி இந்தத் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. 148 கோடியில் இந்தப் பாதையில் 182 கிலோ மீட்டர் தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், திருச்சி முடுக்குப்பட்டி, அரியலூர், விருத்தாசலம் ஆகிய இடங்களில் தலா 110 கிலோவாட் மின் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சோதனை அடிப்படையில் முதன்முதலாக மலைக்கோட்டை விரைவு ரயிலில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு, திருச்சி- சென்னை இடையே இயக்கப்பட்டது. பின்னர், படிப்படியாக மற்ற ரயில்களிலும் மின்சார என்ஜின்கள் வழக்கத்துக்கு வந்தன.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் நெல்லை, கன்னியாகுமரி, பொதிகை, ராமேசுவரம், அனந்தபுரி உள்ளிட்ட 14 ரயில்கள் தற்போது திருச்சி வரை மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை செல்லும்போது எதிர் வழித் தடத்தில் திருச்சி வரை டீசல் என்ஜினில் இந்த ரயில்கள் இயக்கப்படும். திருச்சியிலிருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படுவதால், ஏறத்தாழ 30 நிமிஷங்கள் வரை பயண நேரம் குறைந்துள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட போது 3,000 கிலோவாட் மின்சாரம் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டது. ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்போது 5,000 கிலோவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
திருச்சி - விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்களுக்கு இந்த மின்சாரம் போதவில்லை என்றே கூறப்படுகிறது. இதற்காக, மாநில அரசிடம் கூடுதலாக 1,000 கிலோவாட் மின்சாரம் வழங்க வேண்டுமாறு ரயில்வே நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கடிதம் அனுப்பியது.
ஆனால், 7 மாதங்களாகியும் இதுவரை கூடுதல் மின்சாரம் ரயில்வே நிர்வாகத்துக்கு வழங்கப்படவில்லை. இதனால், ரயில்வே நிர்வாகம் கூடுதலாக ரயில்களில் மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கத் தயக்கம் காட்டுகிறது.
ஏனென்றால், மாநில அரசிடம் இருந்து தற்போது பெறப்பட்டு வரும் 5,000 கிலோவாட் மின்சாரத்தைவிட கூடுதலாக ஒரு கிலோவாட் மின்சாரத்தை பயன்படுத்தினாலும் அபராதம் செலுத்தும் நிலைக்கு ரயில்வே நிர்வாகம் தள்ளப்படுகிறது.
இதுவரை பலமுறை அபராதம் செலுத்தும் நிலை ஏற்பட்டதாக ரயில்வே மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூடுதல் மின்சாரம் கிடைக்காதபட்சத்தில், ரயில்களில் மீண்டும் டீசல் என்ஜின் பொருத்தப்படும் நிலையும் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
148 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்மயமாக்கல் திட்டம் பயனற்று போகுமோ? என்ற அச்சம் ரயில்வே நிர்வாகத்திடம் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் மின்சாரம் வழங்குவது குறித்து தமிழக அரசு உடனடியாக ஆலோசித்து தங்களது முடிவை அறிவிக்காதபட்சத்தில், திருச்சி- விழுப்புரம் ரயில் பாதையில் தற்போது மின்சார என்ஜின் பொருத்தப்பட்டு இயக்கப்பட்டு வரும் ரயில்களின் எண்ணிக்கை குறைவதைத் தவிர்க்க முடியாது என ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.