பாரபட்சத்தால் களை இழக்கும் சீர்காழி உழவர் சந்தை

சீர்காழி, செப். 19: அதிகரித்து வரும் குழுக் கடைகள், அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கைகளால் சீர்காழி உழவர் சந்தை களை இழந்து வருவதாக இங்கு கடை வைத்துள்ள விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

சீர்காழி, செப். 19: அதிகரித்து வரும் குழுக் கடைகள், அதிகாரிகளின் பாரபட்ச நடவடிக்கைகளால் சீர்காழி உழவர் சந்தை களை இழந்து வருவதாக இங்கு கடை வைத்துள்ள விவசாயிகளும், பொதுமக்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

     நாகை மாவட்டம், சீர்காழி வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கத்தரி, வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் வியாபாரிகள், காய்கறிகளை பொதுமக்களிடம் அதிக விலைக்கு விற்று லாபம் அடைந்து வந்தனர். இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

      இந்நிலையில், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கடந்த 2009 ஆம் ஆண்டு சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சுமார் 22 கடைகளுடன் உழவர் சந்தை திறக்கப்பட்டது.    

      விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை அவர்களே உழவர் சந்தையில் வந்து விற்பனை செய்வதற்காக, 220 பேருக்கு அரசு மூலம் உறுப்பினர் அட்டைகளும் வழங்கப்பட்டன. விவசாயிகளும் தாங்கள் பயிரிட்ட பல்வேறு காய்கறிகளுக்கு நல்ல விலை பெற்று வந்தனர்.

     இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் கடைகள், குழுக் கடைகள் என இரு பிரிவுகளாக கடைகள் இயங்கி வந்தன. இங்கு செயல்படும் 3 குழுக் கடைகளுக்கும் மாதம் | 200 வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்தது. தொடக்கத்தில் இந்த இரு பிரிவு கடைகளிலும் மலைப் பகுதி காய்கறிகளும், பச்சைக் காய்கறிகளும் கலந்தே விற்கப்பட்டு வந்தன.     

     இந்நிலையில், திடீரென மலைப் பகுதி  காய்கறிகள் விற்க விவசாயிகளுக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனராம். குழுக் கடைகள் மட்டுமே மலைப் பகுதி காய்கறிகளை விற்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனராம்.

     இதனிடையே, 3 ஆக இருந்த குழுக் கடைகளின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு சில கடைகளில் மட்டுமே சில குறிப்பிட்ட காய்கறிகள் கிடைக்கும் நிலை இருப்பதால், பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வரத் தயங்குகின்றனர்.

      இதுகுறித்து உழவர் சந்தையில் கடை வைத்திருக்கும் விவசாயி ஒருவர் கூறியது:

     சீர்காழியில் இந்த உழவர் சந்தையை ஆரம்பித்தபோது, அனைவரும் அனைத்து வகையான காய்கறிகளையும் கலந்தே விற்று வந்தோம். இதனால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. அதிகளவிலான காய்கறிகள் புழக்கத்தால் திரளான மக்கள் உழவர் சந்தைக்கு வந்தனர்.

    ஆனால், பச்சைக் காய்கறிகள் தனி, மலைக் காய்கறிகளுக்கென தனிக் கடைகள் என்றான பிறகு குறைந்த அளவிலான மக்களே இங்கு வருகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருசில விவசாயிகள் சந்தைக்கே வருவதில்லை.       

    குழுக் கடைகள் வாடகை கொடுப்பதால், அந்தக் கடைகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை தருகின்றனர். இதனால் விவசாயியின் நலன் பின்னுக்கு தள்ளப்படுகிறது.

    இதைவிடுத்து, முன்பு போலவே, அனைத்துக் கடைகளிலும் அனைத்துக் காய்கறிகளும் விற்க அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்; சந்தையை பிற்பகல் 3 மணி வரை நீட்டிக்க வேண்டும். குழுக் கடைகள் தொடர்ந்து அதிகரித்தால், விவசாயிகள் மீண்டும் பழைய நிலைக்கே தள்ளப்படுவர் என்றார் அவர்.

     விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் நலன் கருதி, உழவர் சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளிலும் அனைத்து வகை காய்கறிகளையும் விற்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, உழவர் சந்தைகள் மக்கள் பயன்படுத்தும் சந்தையாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com