வாழ்க்கை என்பது தன்னலம் சார்ந்ததல்ல; பிறர் நலம் சார்ந்தது: கவிஞர் நந்தலாலா

திருச்சி, செப். 21: வாழ்க்கை என்பது அடிப்படையில் தன்னலம் சார்ந்ததல்ல; பிறர் நலம் சார்ந்தது என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா.     திருச்சியில் தமி
Updated on
1 min read

திருச்சி, செப். 21: வாழ்க்கை என்பது அடிப்படையில் தன்னலம் சார்ந்ததல்ல; பிறர் நலம் சார்ந்தது என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா.

    திருச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வயல் மாதக் கூட்டம் மற்றும் கவிஞர் வி. ராஜேஷ் சந்திரார் எழுதிய "நீ... நான்... மழை...' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அவர் மேலும் பேசியது:

   "அன்புக்குக் கட்டுப்பட்டவன்தான் சிறந்த மனிதனாக இருக்க முடியும். இந்தியச் சமூகத்தில் செய்யப்பட வேண்டிய சமூகப் புரட்சிதான் காதல். அதுதான் சாதியை ஒழிக்கும். பிப்ரவரி 14-ம் தேதியன்று காதலுக்கு எதிராக இருந்தவர்கள் மதவெறியர்கள்தான். அடிப்படையில் இந்துப் புராணம் (வள்ளித் திருமணம்) தம்பியின் காதலுக்கு உறுதுணையாக இருந்ததுதான்.

    இருவரும் சமம் என்பதுதான் காதலின் அடிப்படை. பொதுவாக தன்னை நேசிப்பவர்கள்தான் அதிகம். அதையும் தாண்டி மற்றவர்களையும் நேசிக்கச் சொல்வதுதான் காதல். காதலில் மட்டும்தான் தன்னையும்விட பிறரை நேசிக்கச் சொல்லப்படுகிறது.

    திருமணத்துக்கு முன்புதான் காதலிக்க வேண்டும் என்பதல்ல. திருமணத்துப் பிந்தைய கால காதல் முக்கியமானது. நாகம்மையாரின் மறைவுக்குப் பிறகு தந்தைப் பெரியார் எழுதிய கடிதங்களும், மனைவி மறைந்த பிறகு சாமிநாத சர்மா எழுதிய கடிதங்களும் மிக முக்கியமானவை. வாழ்க்கை என்பது அடிப்படையில் தன்னலம் சார்ந்ததல்ல, பிறர் நலம் சார்ந்தது என்பதற்கு ஆதாரங்கள் அவை.

    சாதியை மீறி, காதல் திருமணம் செய்பவர்கள்தான் சிறந்த புரட்சியாளர்கள், சிறந்த சிந்தனையாளர்கள்' என்றார் நந்தலாலா.

   நூலை வெளியிட்டு கவிஞர் தேவேந்திரபூபதி பேசியது:

  "வேலை செய்வதற்கான ஈர்ப்பையும் உந்துதலையும் ஏற்படுத்துபவை இலக்கியங்கள். காதல் ஏன் வாழ்கிறது என்றால் அதிலுள்ள உண்மைத் தன்மைதான் காரணம். இளைய தலைமுறைக்கு நாம் எவற்றை விட்டுச் செல்லப் போகிறோம்? நல்ல கவிதைகள், நவீன கவிதைகள் இன்னும் நிறைய வெளிவர வேண்டும்' என்றார் தேவேந்திரபூபதி.

  விழாவுக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் மு. சரவணன் தலைமை வகித்தார். சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினர் கவிஞர் தங்கம் மூர்த்தி நூலைப் பெற்றுக் கொண்டார். கவிஞர்கள் ஆங்கரை பைரவி, ரத்திகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் இளங்குமரன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கே. நாகநாதன் நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com