கோரிக்கைகள் புறக்கணிப்பு: அதிருப்தியில் வருவாய்த் துறை அலுவலர்கள்

திருச்சி, செப். 22: அதிக பணிச் சுமை மற்றும் கூடுதல் பணிக்கேற்ற ஊதியம் வழங்காதது போன்ற பிரச்னைகளால் அரசின் மீது வருவாய்த் துறை அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர். தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வ
Updated on
2 min read

திருச்சி, செப். 22: அதிக பணிச் சுமை மற்றும் கூடுதல் பணிக்கேற்ற ஊதியம் வழங்காதது போன்ற பிரச்னைகளால் அரசின் மீது வருவாய்த் துறை அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர். தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் வருவாய்த் துறையில் ஏறத்தாழ 15,000 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட வருவாய் அலுவலர் வரை அனைவருமே இந்தத் துறையைச் சேர்ந்தவர்களே.

மக்களிடம் நேரடியாகச் சென்று பழகும் வாய்ப்பை அதிகம் கொண்டவர்களான

வருவாய்த் துறையினர், அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.

ஆனால், அரசின் அண்மைக்கால செயல்பாடுகள் மீது மாநிலம் முழுவதும் உள்ள வருவாய்த் துறை அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், இரவு பகல் பாரமாலும், விடுப்பு எடுக்காமலும் வேலைப்பார்க்கும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தாமதித்து வருவதும், நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் அரசு தட்டிக் கழித்து வருவதும் வருவாயத் துறையினரின் அதிருப்திக்கு காரணங்களாகக் கூறப்படுகிறன்றன.

தற்போதைய திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நான்கு முறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்கின்றனர் வருவாய்த் துறை அலுவலர்கள்.

அண்மையில் அறிவிக்கப்பட்ட ஒருநபர் குழு பரிந்துரை மீதான ஆணைகளில் வருவாய்த் துறை அலுவலர்களின் பதவிகளது பெயர் மாற்றம் மற்றும் ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக எந்த ஆணையும் பிறப்பிக்கப்படாதது தங்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, தற்போதைய திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 2006-ம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, வருவாய்த் துறையினரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், புதிதாக எந்தப் பணியிடங்களும் நிரப்படவில்லை.

ஏழை விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம், ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம், இலவச எரிவாயு வழங்கும் திட்டம், இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம், தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலச் சட்டங்களின் கீழ் வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறையின் கீழ் வரும் நல வாரியங்களின் திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றுவது தாங்கள்தான் என்கின்றனர் வருவாய்த் துறையினர்.

கூடுதல் பணிக்காக மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் 30 சதம் தனி ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்த் துறையில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் பெயர்களை முறையே இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் எனப் பதவியின் பெயரை மாற்ற வேண்டும்.

சிறப்புத் தேர்வின் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பாஸ்போர்ட், சுனாமி, தேர்தல், வண்ணத் தொலைக்காட்சி ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் தொகுப்பூதியம் பெறுபவர்களை நிரந்தரமாக்கி காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என 15 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு வருவாய்த் துறையினர் அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து வருவாய்த் துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை அக்டோபர் 2-ம் தேதி திருச்செந்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தல் தங்களது போராட்ட முடிவு குறித்து அறிவிக்கப்படவுள்ளதாக வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் கே. முருகன், மாநிலச் செயலர் பழ. சண்முகத்துரை ஆகியோர் கூறியது:

"அரசின் முதுகெலும்பாகச் செயல்படுபவர்கள் வருவாய்த் துறை அலுவலர்கள். ஆனால், எங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாமல் நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட நாள்களாகக் காலியாக உள்ள சுமார் 4,000 பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.

கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, ஒரு மாதத்துக்குள் பிரச்னைகள் முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால், 6 மாதங்கள் ஆகியும் வருவாய்த் துறை அலுவலர்களை அரசு கண்டு கொள்ளவில்லை.

எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் பெரிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்து திருச்செந்தூரில் நடைபெறவுள்ள எங்களது சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்' என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com