தஞ்சை பெரிய கோயில் - 1000

தஞ்சாவூர், செப். 22: தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சை அரண்மனை அருகே அமைக்கப்படும் கண்காட்சி அரங்கம் சோழர் கலைகளின் களஞ்சியமாக உருவாகி வருகிறது. தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவத

தஞ்சாவூர், செப். 22: தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சை அரண்மனை அருகே அமைக்கப்படும் கண்காட்சி அரங்கம் சோழர் கலைகளின் களஞ்சியமாக உருவாகி வருகிறது.

தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா தமிழக அரசு சார்பில் புதன்கிழமை தொடங்கி செப். 26-ம் தேதி வரை 5 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், கண்காட்சி, கிராமியக் கலை நிகழ்ச்சிகள் என தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த விழாக்களில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

விழாவையொட்டி, தஞ்சை அரண்மனை வளாகத்தில் ஏறத்தாழ 25,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி கடந்த 20 நாள்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் முகப்பு கோட்டை வடிவில் அமைக்கப்படுகிறது. மேலும், கோட்டை வாயிலின் இருபுறங்களிலும் இரு வீரர்கள் குதிரை மீது அமர்ந்திருப்பது போலவும், வாசலில் முரசு மற்றும் கொம்பு ஊதும் கலைஞர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப் பகுதியை ஆண்ட சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் வகையிலும், அவர்களது போர் வெற்றிகள் மற்றும் வாழ்க்கை முறைகளை விளக்கும் வகையிலும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி அரங்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் கலை இயக்குநர் ஜெ.பி. கிருஷ்ணா தலைமையில், 70 ஓவியக் கலைஞர்கள், தச்சர்கள் மற்றும் மாதிரிகள் உருவாக்குவோர் என, ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் பயன்படுத்திய போர்க் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள், சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய செப்பேடுகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், தஞ்சை பெரிய கோயிலின் பல்வேறு மாதிரி வடிவங்கள் என மக்கள் இதுவரை கண்டிராத பல்வேறு அரிய பொக்கிஷங்கள் இந்த அரங்கங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இந்த அரங்கம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, சங்கீத மகாலில் அமைக்கப்படும் தனிக் காட்சி அரங்கில் பழைமையான தெய்வ செப்புத் திருமேனிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதற்கென சென்னை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள அருங்காட்சியகங்களிலிருந்து செப்புத் திருமேனிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை காணக் கிடைக்காத அற்புதச் சிற்பங்களாகும்.

கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களின் கண்களைக் கவரும் வகையில், சோழர் காலத்தை நம் கண்முன்னே காட்சிப்படுத்தும் வண்ண ஓவியங்களைத் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கலை இயக்குநர் ஜெ.பி. கிருஷ்ணா கூறியது:

பல்வேறு ஓவியப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், பாரம்பரியமும், கலையம்சமும் நிறைந்த இந்தப் பணியை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

ஓவியர் கோபுலு வரைந்த புராண கால ஓவியங்களும் இங்கு வரையப்படுகிறது. இதுதவிர, குதிரை பூட்டிய தேரில் ராஜராஜன் செல்வது போன்ற காட்சியும் மாதிரிச் சிற்பமாக அமைக்கப்படுகிறது என்றார் அவர்.

"தமிழக முதல்வரின் ஒப்புதலின்படி, கோட்டை வடிவ முகப்புடன் கூடிய கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, இது புதன்கிழமை இரவு நிறைவு பெறும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், செப்பேடுகள் சோழர் கால வரலாற்றையும் பெரிய கோயிலின் பெருமையையும் பறைச்சாற்றும் வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்படுகிறது' என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவில் சோழ மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பெட்டகமாகவும், கலைக் களஞ்சியமாகவும் இந்தக் கண்காட்சி காண்போரின் புருவத்தை உயரச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com