சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பாபநாசத்தில் புறவழிச் சாலை அமைக்கப்படுமா?

 பாபநாசம்,செப். 23:     தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் நகருக்குள் பெருகி வரும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புற வழிச் சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.     பாபநாசம்

Updated On :20 செப்டம்பர் 2012, 6:02 pm

 பாபநாசம்,செப். 23:     தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் நகருக்குள் பெருகி வரும் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புற வழிச் சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    பாபநாசம் நகரம் 34 ஊராட்சிகள், பாபநாசம், அய்யம்பேட்டை என இரு தேர்வு நிலை பேரூராட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒன்றியமாகவும், வட்டத் தலைநகரமாகவும், நகரைச் சுற்றி நூற்றுக்கணக்கான சிறு கிராமங்கள், சிறப்புமிக்க பல வழிபாட்டுத் தலங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள்  தொடக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தொழில்பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை தனனகத்தே கொண்டுள்ளது.

  மேலும், கும்பகோணம், தஞ்சாவூர், திருவையாறு, திருவாரூர் உள்ளிட்ட அருகிலுள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் ஒரு மைய நகரமாகவும் உள்ளது.

   இங்கிருந்து வெளியூர்களுக்கும், தங்களின் அன்றாட பணிகள் காரணமாக ஆயிரக்கணக்கானோர் தினமும் பேருந்து, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவைகளில் சென்று வருகின்றனர். பல்வேறு நகரங்களிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும் பாபநாசம் நகரை கடந்து செல்லுகின்றன. ஆனால், பாபநாசம் நகரின் முக்கியச் சாலைகள் தரமானதாக அமைக்கப்படாததாலும், போதிய அகலமின்றி மிகவும் குறுகிய சாலைகளாகவும் உள்ளன.

  மேலும், அதிகமான வளைவுகளை கொண்டுள்ளதாலும், அவ்வழியே வரும் வாகனங்கள் விரைந்து செல்ல முடியாததாலும், பாபநாசம் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் விபத்துகளால் உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன. இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்கும் வகையில் சுந்தரப் பெருமாள் கோயிலில் தொடங்கி உத்தாணி வரைலான புறவழிச் சாலையின் தொடர்ச்சியாக உத்தாணி, பாபநாசம் அய்யம் பேட்டை வரை புறவழிச் சாலை அமைக்க ஆலோசிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

  பாபநாசம் சாலை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், சாலையை அகலப்படுத்தி, புதிய சாலையாக அமைக்கும் பணிக்காக சாலையை அளக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இருப்பினும், சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கும் போது திருப்பாலைத்துறை தொடங்கி பாபநாசம், ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், அய்யம்பேட்டை வரையிலான சுமார் 10 கி.மீ. தொலைவு வரை உள்ள பல அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

   எனவே, இது போன்ற சிரமங்களை தவிர்க்கும் வகையில், பாபநாசம் நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், செயல்படுத்தப்படாமல் உள்ள உத்தாணி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் புறவழிச் சாலை திட்டத்தை தொடங்கி, நகரில் பெருகி வரும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.