சீர்காழி புதிய பேருந்து நிலையத்தினுள் செல்லாத அரசு விரைவுப் பேருந்துகள்

சீர்காழி, செப் 25: நாகை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லாமல் அரசு விரைவுப் பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பயணிகளை பேருந்து நிலையத்தின் வெளிப்புறச் சாலையிலேயே ஏற்றி, இறக்கி

சீர்காழி, செப் 25: நாகை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லாமல் அரசு விரைவுப் பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பயணிகளை பேருந்து நிலையத்தின் வெளிப்புறச் சாலையிலேயே ஏற்றி, இறக்கிச் செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

   சீர்காழி வட்டத்தை சுற்றியுள்ள கொள்ளிடம், பழையார், திருமுல்லைவாசல், பூம்புகார், வடரங்கம், வைத்தீஸ்வரன்கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் சீர்காழி நகர்ப் பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்துதான் வெளியூர் செல்ல வேண்டும்.

  நாள்தோறும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் சீர்காழி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூருக்கு செல்கின்றனர். தஞ்சை, கும்பகோணத்திற்கு அடுத்தப்படியாக இந்தப் பேருந்து நிலையம் அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய பேருந்து நிலையம் ஆகும்.

    தற்போது சீர்காழி பேருந்து நிலையத்திற்கு உள்ளே தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகள், கும்பகோணம், விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த எக்ஸ்பிரஸ் பேருந்துகள் செல்வதில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டும் உள்ளே வந்து செல்கின்றன. அதிக அளவிலான விரைவு, எக்ஸ்பிரஸ் பேருந்துகள் வெளியே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன.

   இதனால், இங்கிருந்து வெளியூருக்கு செல்ல விரும்பும் பயணிகள் பேருந்து நிலையத்தின் வெளியே வெயில், மழையில் காத்திருக்க வேண்டியுள்ளது. வயதானவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகளின் நிலையோ மிகவும் மோசம்.

   மேலும், பேருந்துகள் நிலையத்தினுள் வருமா, வராதா என்ற நிலை தெரியாது பயணிகள் தடுமாறுவதும், நினைத்த இடத்தில் நிற்கும் பேருந்துகளைப் பிடிப்பதற்காக ஓடிச் சென்று விழுவதும் வாடிக்கையாக நடைபெறுகிறது.

   தற்போது சீர்காழியில் இருந்து எருக்கூர் வரை புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், அனைத்து வாகனங்களும் சீர்காழி நகர்ப் பகுதி வழியாகவே செல்கின்றன. இதனால், நகரினுள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், விரைவுப் பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லாமல் வெளிச் சாலையிலேயே பயணிகளை இறக்கி, ஏற்றி செல்வதால், அந்தப் பகுதி முழுவதும் நெரிசல் அதிகமாகி விபத்துக்கான சூழல் அதிகரித்துள்ளது.

 மேலும், அணைக்கரை கொள்ளிடம் பாலம் விரிசல் காரணமாக, அந்த வழியாகச் சென்னையில் இருந்து தஞ்சை, கும்பகோணம் செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் சீர்காழி வழியாகவே செல்வதால் இந்த நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது.

  இதுகுறித்து புகார் தெரிவித்தும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினர், சீர்காழி போக்குவரத்துக் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

   எனவே, நாகை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com