அன்னதானத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதில் நிதிப் பற்றாக்குறை இருந்தால் அரசை அணுகலாம்

திருச்சி, பிப். 11: தமிழகத்தில் கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்துவதில் கோயில்களுக்கு ஏதும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், அரசை உடனடியாக அணுகினால

திருச்சி, பிப். 11: தமிழகத்தில் கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு செயல்படுத்துவதில் கோயில்களுக்கு ஏதும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால், அரசை உடனடியாக அணுகினால் நிதி ஒதுக்கப்படும் என்றார் ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் பி.ஆர். சம்பத். (படம்)

திருச்சி உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் தங்கரதப் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் அளித்த பேட்டி:

உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் 10 கிலோ 650 கிராம் தங்கம், 25 கிலோ வெள்ளியைக் கொண்டு ரூ. 2 கோடியில் தங்கரதம் அமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளதால் இந்த மாதம் 18 ஆம் தேதி தங்க ரத வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இந்த வெள்ளோட்டத்தில் ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத் துறை அமைச்சர் என். செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 20 கோயில்களில் தங்கரதம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 21}வது கோயிலாக உறையூர் கோயிலில் முடிக்கப்பட்டுள்ளது.

2009}10 ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் 1100 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரும்பாலான கோயில்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள கோயில்களிலும் விரைவில் திருப்பணிகள் முடிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 38,465 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சீருடை வழங்கப்பட்டுள்ளது. இதுபோல, பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டையும் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ராமேசுவரம் கோயில் உள்ளிட்ட 181 முக்கியமான கோயில்களின் தூய்மைப் பணி அவுட் சோர்சிங் முறையில் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் 385 கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துவதில் கோயில்களுக்கு ஏதும் நிதி பற்றாக்குறை ஏற்பட்டால் அரசை அணுகலாம். அந்தக் கோயில்களுக்கு உடனடியாக நிதி வழங்கப்படும் என்றார் சம்பத்.

இதைத் தொடர்ந்து, கோயில் பணியாளர்களுக்கு புதிய சீருடைகளை ஆணையர் சம்பத் வழங்கினார்.

பேட்டியின் போது திருச்சி மண்டல ஹிந்து சமய அறநிலைய ஆட்சித் துறை இணை ஆணையர் மு.க. பாலசுப்பிரமணியன், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் பா. பாரதி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் இணை ஆணையர் ஜயராமன், துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) கல்யாணி, உறையூர் கோயில் செயல் அலுவலர் எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com