கவனிப்பாரற்ற நிலையில் தேரழந்தூர் கம்பர் மேடு

மயிலாடுதுறை, ஜூலை 7: கவிச் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் கம்பர் பிறந்து, வாழ்ந்த இடமான தேரழந்தூரில் உள்ள கம்பர் கோட்டம், கம்பர் மேடு ஆகியவை தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட
கவனிப்பாரற்ற நிலையில் தேரழந்தூர் கம்பர் மேடு

மயிலாடுதுறை, ஜூலை 7: கவிச் சக்கரவர்த்தி என்றழைக்கப்படும் கம்பர் பிறந்து, வாழ்ந்த இடமான தேரழந்தூரில் உள்ள கம்பர் கோட்டம், கம்பர் மேடு ஆகியவை தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

    தமிழுக்கும், தமிழகத்திற்கும் ஒரு மிகப்பெரிய ஏற்றத்தை அளித்த கவிச் சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊர் நாகை மாவட்டம், குத்தாலம் வட்டம், தேரழந்தூர் என்னும் கிராமம். கம்பர் பிறந்த ஊர், காவிரி தங்கும் ஊர், கும்ப முனிவரின் சாபம் விமோசனம் பெற்ற  திருவழூந்தூர் என மூதாதையார்களால் அழைக்கப்பட்ட தற்போதைய தேரழந்தூர் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாகக்  கருதப்படுகிறது.

       இதுபோன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட தேரழந்தூரில் கம்பரின் நினைவைப் போற்றும் வகையில், கம்பன் கழகம் சார்பில் ஆண்டுதோறும் கம்பன் விழா நடத்தப்பட்டு வருகிறது.

     கம்பரை மேலும் கௌரவிக்கும் வகையில், அருள்மிகு ஆமருவியப்பன் கோயிலுடன் இணைந்த கம்பர்  கோட்டம் அமைக்க, அப்போதைய கம்பன் கழக கமிட்டியினர் பெரும் முயற்சி மேற்கொண்டு, சென்னை திருவல்லிகேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் திருப்பணிக் குழு உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் மூலமாக ரூ. 12 லட்சமும், இந்து சமய அறநிலையத் துறையின் மானியம் மூலமாக ரூ. 8 லட்சமும் நிதியுதவி பெற்று, 1984-ல் ரூ. 20 லட்சத்தில் கம்பர் கோட்டம் கட்டப்பட்டது. அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். தலைமையில், முதன்மைச் செயலாளர் கு. சொக்கலிங்கத்தால் திறந்துவைக்கப்பட்டது. இந்தக் கம்பர் கோட்டத்தில் கம்பரின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

     கம்பர் வாழ்ந்த இடம் கம்பர் மேடு என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கம்பர் மேடு இந்திய தொல்லியல் துறையினரால் அகழ்வாராய்ச்சிக்கு  உள்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சின்னமாகக்  கருதப்படும் கம்பர் மேடு, 1958 ஆம் ஆண்டின் புராதனச்   சின்னங்கள் மற்றும் புதையுண்ட தொல்பொருள்  பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

     இதன்மூலம், கம்பர் மேடு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும், இதைச் சேதப்படுத்துபவர்கள் அல்லது ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தொல்லியல்  துறையினர் அறிவிப்புப் பலகை வைத்துள்ளனர்.

     ஆனால், இந்த அறிவிப்பையும் மீறி சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த இடத்தின் அருகே கட்டடங்களையும் கட்டியுள்ளனர். மேலும், தற்போது கம்பர் மேடு முழுவதும் முள்புதர்களால் சூழப்பட்டு, உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.

     ரூ. 20 லட்சத்தில் கட்டப்பட்ட கம்பர் கோட்டமும் நீண்ட நாள்களாகப் பராமரிக்கப்படாமல் இருந்தது. அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்  குத்தாலம் பி. கல்யாணம் ஆகியோரின் முயற்சியால் இந்து சமய அறநிலையத் துறையினரிடம் முறையான ஒப்புதல் பெறப்பட்டு, உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் கம்பர் கோட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதையடுத்து, கம்பர் கோட்ட வளாகத்திலேயே சமையலறை, உணவு அருந்தும் கூடம்,  கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ரூ. 35 லட்சத்தில் செய்யப்பட்டு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கம்பர் திருமண மண்டபமாக செயல்பட்டு வருகிறது.

    தற்போது குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் இந்தக் கம்பர் திருமண மண்டபத்தில் திருமணம் உள்ளிட்ட விழாக்களும், அரசு விழாக்களும் நடைபெற்று வருகின்றன. இங்கு நடைபெறும் விழாக்களுக்கு ரூ. 3 ஆயிரம் வரை வாடகையும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

     ஆனால், கம்பர் கோட்டத்தில் (கம்பர் திருமண மண்டப வளாகத்தில்) உள்ள கம்பர் மணி மண்டபத்தில் சுமார் 6 மாதங்களாக மின் விளக்குகள் எரிவதில்லை.  "இருளில் மூழ்கிக் கிடக்கிறார் கம்பர்' என இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றனர்.

    இதுகுறித்து தமிழ் ஆர்வலரும், ஓய்வு பெற்ற அரசு அலுவலருமான கிருஷ்ணமாச்சாரியர் கூறியது:

    விழாக்களின்போது மட்டுமே கம்பர் கோட்டம் திறக்கப்படுகிறது. சில நேரங்களில் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பூட்டி இருப்பதால் வெளியில் நின்றவாறே, கம்பரை வணங்கி செல்கின்றனர். கம்பர் கோட்டத்தில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரிவதில்லை.     இதுகுறித்து ஊராட்சித் தலைவரிடமும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தேரழந்தூரில் 75 சதத்தினர் பிற மதத்தினராக உள்ளதாலும், தமிழின் மீது உள்ள ஆர்வமும், கம்பர் மீது உள்ள பற்றும்  குறைவாகவே இருப்பதாலும்தான் இந்தக் கம்பர் கோட்டம், கம்பர் மேடு ஆகியவை   போற்றப்படவில்லை என்றார் அவர்.

    தேரழந்தூர் கம்பன் கழகத் தலைவர் ஜானகிராமன் கூறியது:

   இந்த ஊரை சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என  சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசுக்கும், சுற்றுலாத் துறை உயர் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    தேரழந்தூரில் திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற அருள்மிகு செüந்திர நாயகி  உடனாய வேதபுரீசுவரர் திருக்கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவதாகக் கருதப்படும் ஆமருவியப்பன் கோயில், சுற்றுப்பகுதியில் திருமணஞ்சேரி, திருவேள்விக்குடி, திருவாவடுதுறை, திருவாலங்காடு உள்ளிட்ட 14  ஊர்களில் பாடல்கள் பெற்ற திருக்கோயில்கள் உள்ளதாலும், இந்த ஊரை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இணைத்து பராமரிக்க வேண்டும். இதன்மூலம், தேரழந்தூரும், அதைச் சுற்றியுள்ள குத்தாலம் போன்ற பகுதிகளும் மேலும் வளர்ச்சியடையும் என்றார் அவர்.

     கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தி தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்த்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழுக்கும், தமிழருக்கும் பெருமைச் சேர்த்த கவிச் சக்கரவர்த்தி கம்பனின் பெருமையை உலகறியச் செய்ய கம்பர் கோட்டத்தையும்,  கம்பர் வாழ்ந்த கம்பர் மேட்டையும் பெருமைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொண்டு, சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இவற்றைக் கொண்டு வர வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com