கிராப்பட்டி ரயில்வே மேம்பாலம்: கண் துடைப்பு நாடகமா?

திருச்சி, பிப். 1: திருச்சி கிராப்பட்டி - எடமலைப்பட்டிபுதூர் இடையே புதிதாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெறும் கண் துடைப்புக்காக மட்டுமே நடத்தப்பட இருப்பதாகப
Updated on
2 min read

திருச்சி, பிப். 1: திருச்சி கிராப்பட்டி - எடமலைப்பட்டிபுதூர் இடையே புதிதாகக் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெறும் கண் துடைப்புக்காக மட்டுமே நடத்தப்பட இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

  திருச்சி - மதுரை பிரதான சாலையில் கிராப்பட்டி - எடமலைப்பட்டிபுதூர் இடையே ரயில்வே கேட் (கடவு எண். 325) உள்ளது. திருச்சி - புதுக்கோட்டை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் இந்தப் பாதையில் செல்வதால், ரயில்வே கேட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம்.

   ஏறத்தாழ 12 ரயில்கள் இந்தப் பாதையில் சென்று வந்தாலும், பிரதான ரயில்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் செல்கின்றன. இந்த நேரத்தில் கேட் மூடப்படுவதால், பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

   எனவே, ரயில்வே கேட்டுக்குப் பதிலாக மேம்பாலம் கட்ட வேண்டும் என கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் பகுதி மக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கிராப்பட்டி - எடமலைப்பட்டிபுதூர் இடையே மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

   ஆனால், இதற்கான நிதியை தெற்கு ரயில்வே நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் சம அளவில் ஒதுக்கீடு செய்தால் மட்டுமே மேம்பாலம் கட்ட முடியும் என்பதால், பணிகளைத் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது.

  இந்நிலையில், தெற்கு ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் துறை (திட்டங்கள்) சார்பில், ரூ. 31.43 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்படும் என தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது.

     இதில், ரயில்வே நிர்வாகம் தரப்பில் ரூ. 9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளத்தின் மேல் பகுதியில் பாலம் அமைக்கவும், 6 மீட்டர் அகலத்துக்கும், மூன்று மீட்டர் உயரத்துக்கும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ செல்லும் வகையில் சுரங்கப் பாதையும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

   புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (பிப். 2) நடைபெறுகிறது. தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் அடிக்கல் நாட்டுகிறார்.

     ஆனால், திருச்சியில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள், லாரிகள் அனைத்துமே, சென்னை - மதுரை புறவழிச்சாலை வழியாகவே செல்வதால் இந்தப் பகுதியில் தற்போது போக்குவரத்து ஓரளவு குறைந்துள்ளது.

    இத்தனை காலம் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில், திடீரென இங்கு மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்கான காரணம் தெரியாமல் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.  மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல், ஒப்பந்தப்புள்ளி கோருதல் என ஆரம்பக் கட்டப் பணிகள் எதுவுமே இதுவரை மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

     ரயில்வே தண்டவாளத்துக்கு மேலே மேம்பாலம் அமைக்க வேண்டுமானால், மேம்பாலத்துக்கான வரைபடத்தை ரயில்வே நிர்வாகத்திடம் காண்பித்து அவர்கள் ஒப்புதல் அளித்த பிறகே பணிகளை மேற்கொள்ள முடியும்.

     இந்த பாலத்தைப் பொருத்தவரை ரயில்வே கட்டுமானப் பிரிவுக்கு இதுவரை முறையாக எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லையாம்.   திருச்சியைப் பொருத்தவரை போக்குவரத்து நெரிசல் அதிகம் இருப்பது ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம்தான். இந்தப் பாலத்தை விரிவுபடுத்த மத்திய அரசு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு செய்து ஓராண்டாகியும் மாநில அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மக்களுக்கு பிரதான பயனுள்ளதாக இருக்கும் ஜங்ஷன் ரயில்வே பாலத்துக்கான பணிகளை முதலில் தொடங்காமல், கிராப்பட்டி - எடமலைப்பட்டிபுதூர் ரயில்வே மேம்பாலப் பணிகளை தொடங்குவதற்கு முக்கியக் காரணம் அந்தப் பகுதியில் உள்ள வாக்குகளை கருத்தில் கொண்டுதான் என்ற புகார் எழுந்துள்ளது.

    மேலும், கிராப்பட்டி, எடமலைப்பட்டிபுதூர் பகுதி மக்களின் முக்கிய பிரச்னையாக இருப்பது கே.கே. நகர் பகுதிக்குச் செல்லும் பாதையை ராணுவம் அடைத்து வைத்திருப்பதுதான். இதற்குத் தீர்வு காணுவதில் மக்கள் பிரதிநிதிகள் எந்தவித முயற்சியும் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.  மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை மட்டுமே பாலம் அமைப்பதில் தீவிரம் காட்டி வருவது  போலக் காட்டிக் கொள்ளவது சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் என்ற புகாரும் பரவலாக நிலவுகிறது.

  எனவே, கிராப்பட்டி - எடமலைப்பட்டிபுதூர் ரயில்வே மேம்பாலம் உண்மையிலேயே செயல் வடிவம் பெறுமா? என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com