வேதாரண்யம் கடல் பகுதியில் ராணுவ பயன்பாட்டுக் கழிவுகள்: மீனவர்கள் அச்சம்

வேதாரண்யம், ஜன. 3: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கடல் பகுதியில் உணரப்படும் குண்டுகள் வெடிப்பதைப் போன்ற சப்தம், ராணுவப் பயன்பாட்டுக்குரிய அபாயகரமான வெடி பொருள்கள் கரை ஒதுங்குவது போன்ற சம்பவங்கள்
Updated on
2 min read

வேதாரண்யம், ஜன. 3: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகேயுள்ள கடல் பகுதியில் உணரப்படும் குண்டுகள் வெடிப்பதைப் போன்ற சப்தம், ராணுவப் பயன்பாட்டுக்குரிய அபாயகரமான வெடி பொருள்கள் கரை ஒதுங்குவது போன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து வருவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

  தமிழகத்தின் கிழக்கு கடலோரத்தில் உள்ள முக்கியமான மீன்பிடித் தளங்களில் குறிப்பிடத்தக்க இடமாகக் கருதப்படும் நாகப்பட்டினம் தொடங்கி, கோடியக்கரை வரையிலான பகுதி வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியைச் சார்ந்தது.

  கோடியக்கரைக்கு தென்கிழக்கே உள்ள கடலில் குறிப்பிட்ட பரப்பளவு மீன் இனப்பெருக்கப் பகுதியாக அரசால் அடையாளம் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மீனவர்கள் இந்தப் பகுதியில் மீன் பிடிப்பதில் முனைப்புக் காட்டுவது வழக்கம்.

  நாகை மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மீனவர்கள் 4 ஆயிரத்துக்கும் மேலான கண்ணாடியிழைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேலான விசைப் படகுகள், தவிர கட்டுமரங்களில் சென்றும் மீன் பிடிக்கின்றனர்.

   2004 ஆம் ஆண்டில் சுனாமியால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளானதால் அவர்கள் அச்சமடைந்து காணப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, காயப்படுத்துவது, துன்புறுத்துவது, கைது செய்வது போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால், மீனவர்கள் அச்சத்துடனேயே கடலுக்குள் சென்று வரும் நிலை தொடர்ந்து வருகிறது.

   இதனிடையே, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ராணுவ பயன்பாட்டுக்குரிய அபாயகரமான வெடி பொருள்கள் கரை ஒதுங்குவதும், மர்மமாக உணரப்படும் குண்டுகள் வெடிப்பதைப் போன்ற சப்தமும் அண்மைக் காலமாக அதிகரித்து வருவது மீனவர்களிடையே அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   குறிப்பாக, கடந்த 20.2.2010 அன்று புஷ்பவனம் மீனவர்கள் வலையில் சிக்கிய வெடி பொருளைப் பாதுகாப்பு வட்டார அலுவலர்கள் செயலிழக்கச் செய்தனர்.

  1.6.2010 மாலை வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை பகுதியில் திடீரென பெரும் சப்தமும், அதைத் தொடர்ந்து நில அதிர்வும் உணரப்பட்டது. இதனால், 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. குண்டு வெடித்ததைப் போன்ற அந்த சப்தம் கடல் பகுதியிலிருந்து வந்ததையும், சுமார் 10 கி.மீ. தொலைவு வரை இந்தச் சப்தம் உணரப்பட்டதையும் பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதி செய்தன.

   புவியியல் ஆய்வாளர்கள் நில நடுக்கம் ஏற்பட்டதற்கான பதிவு இல்லை எனத் தெரிவித்தபோதும், குண்டு வெடிப்பு போன்ற அதிர்வின் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர்.   கடல் பரப்புக்குள் எண்ணெய் ஆய்வுக்கான துரப்பனப் பணிகள்கூட நடைபெறாத நிலையில், அந்தக் குண்டு வெடிப்புக்கான காரணம் இன்றுவரை அறியப்பட்டதாகத் தெரியவில்லை.  

   இதையடுத்து, 21.8.2010 அன்று இதே பகுதியில் உள்ள கடல் பரப்பிலிருந்து மீன்பிடி வலையில் சிக்கிய ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் இரண்டை இந்திய கடற்படையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

   இதேபோன்ற ராக்கெட் லாஞ்சர் குண்டு நாகை மீனவர்கள் வலையில் சிக்கியது. இதை 29.9.2010 அன்று உடைத்தபோது வெடித்ததில் மீனவர் திருமுருகன் உயிரிழந்தார். வெல்டர் பக்கிரிசாமி பலத்த காயமடைந்தார்.  

   இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) மாலை புஷ்பவனம் கடல் பரப்பில் குண்டுகள் வெடித்ததைப் போன்ற பெருத்த சப்தம் உணரப்பட்டதாக அந்தப் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரிக்கின்றன.

   இந்தப் பகுதி கடலில் வெடி பொருள்கள் மிதந்து வந்து கரை ஒதுங்கும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருவது தொடர்வதோடு, அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

   இலங்கைக் கடல் பகுதியில் அன்னிய நாட்டு ராணுவத் தளங்கள் அமைக்க அனுமதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், நடைபெற்று வரும் இந்தச் சம்பவங்கள் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், வேறு நாடுகளின் ராணுவக் கழிவுகள் சர்வதேசக் கடல் பரப்பில் கொட்டப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

   எனவே, நாட்டின் பாதுகாப்பில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ள கோடியக்கரை, வேதாரண்யம் பகுதி சார்ந்த கடல் பரப்பில் நிகழ்ந்து வரும் இந்தச் சம்பவங்கள் தொடர்பாக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com