தியாகராஜ பாகவதர் சிலை நிறுவப்படுமா?

திருச்சி, ஜன. 4: தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் என பல பட்டப் பெயர்களுடன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் எம்.கே. தியாகராஜ பாகவதர்.   இவர் நடித்த "ஹரிதாஸ்' திரைப்படம் 1944-ம
Updated on
2 min read

திருச்சி, ஜன. 4: தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் என பல பட்டப் பெயர்களுடன் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் எம்.கே. தியாகராஜ பாகவதர்.

  இவர் நடித்த "ஹரிதாஸ்' திரைப்படம் 1944-ம் ஆண்டு வெளியாகி, 1946-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று தீபாவளிப் பண்டிகைகளைக் கண்டு இரண்டரையாண்டுகள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.

 மாயவரம் கிருஷ்ணமூர்த்தி }மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக கடந்த 1910-ம் ஆண்டு மார்ச் முதல் தேதி பிறந்த எம்.கே. தியாகராஜ பாகவதரின் பெற்றோர், அவர் சிறுவனாக இருந்தபோதே திருச்சி பாலக்கரை எடத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினர்.

   ஆறாம் வகுப்பு வரை படித்த பாகவதர் சிறு வயதிலேயே இசையின் மீது கொண்டிருந்த நாட்டத்தால், கோயில்களில் நடைபெறும் பஜனையில் பாடத் தொடங்கினார். திருச்சி ரசிக ரஞ்சன சபாவின் நிறுவனர் எஸ்.ஜி. நடேச ஐயரின் பார்வையில் பட்ட பாகவதருக்கு "அரிச்சந்திரா' நாடகத்தில் லோகிதாசராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   திருவையாறைச் சேர்ந்த ராமசாமி பத்தரிடம் முதன் முதலில் இசையைக் கற்ற பாகவதர், பின்னர் மதுரை பொன்னு அய்யங்கார், ஆலத்தூர் சகோதரர்களிடம் கர்நாடக இசையும் பயின்றார்.

  எஸ்.டி. சுப்புலட்சுமியின் கதாநாயகனாக பாகவதர் நடித்த "பவளக்கொடி' என்ற  நாடகம் எல்லா ஊர்களிலும் அரங்கேறியது. அந்தக் காலத்தில் மிகப் பெரிய இயக்குநரான கே. சுப்பிரமணியன் இந்த நாடகத்தை திரைப்படமாக எடுத்தார்.

   இந்தப் படத்திலும் பாகவதர் கதாநாயகனாக நடித்தார். கடந்த 1935-ம் ஆண்டில் பவளக்கொடி திரைப்படம் வெளியான நாள் முதல் தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளானார் தியாகராஜ பாகவதர்.

   தொடர்ந்து, 1937-ம் ஆண்டில் சிந்தாமணி, அம்பிகாபதி, 1938}ல் சத்தியசீலன், 1939}ல் திருநீலகண்டர், 1941}ல் அசோக்குமார், 1943}ல் சிவகவி, 1944}ல் ஹரிதாஸ் என மொத்தம் 14 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

  இதில், பாடும் கலைஞர் மட்டுமல்ல, உருக்கமாக நடிக்கக் கூடியவர் என்பதை எடுத்துக் காட்டிய படம் திருநீலகண்டர். நல்ல சிவந்த நிறத் தோற்றமுடைய அவரது குரல் அந்தக் காலத்தில் "கோல்டன் வாய்ஸ்' என்பர். பெண் குரலும் சேர்ந்த அவரது குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருந்திருக்க முடியாது.

  இதனால், திரையுலகின் முதல் "சூப்பர் ஸ்டாராக' அவர் வலம் வந்திருக்கிறார்.

  பாகவதரின் சிகை அலங்காரம் போன்று அவர்களது ரசிகர்கள் பலரும் அந்தக் காலத்திலேயே "பாகவதர் கிராப்' என அவரது "ஸ்டைலில்' ஏராளமான ரசிகர்கள் முடி வளர்த்தனர்.

   கடந்த 1935-ம் ஆண்டு முதல் 1960-ம் ஆண்டு வரை "பாகவதர் கிராப்' மிகவும் பிரபலம். இதேபோல, அவர் அணிந்திருந்த "ஜிப்பா'வும் அந்தக் காலத்தில் பிரபலம். பாகவதர் ஜிப்பா என ரசிகர்கள் பெருமையாக அணிந்து கொண்டனர்.

   புகழிலும், பணத்திலும் உச்சியில் இருந்தாலும், அவர் ரசிகர்களிடம் எளிமையாகவே பழகக் கூடியவர் என்றே அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

   தன்னை நாடி வருபவர்களை யாராவது தடுத்தால் "ரசிகரின் அன்பைத்தான் பார்க்க வேண்டும்' எனக் கூறுவாறாம் பாகவதர். எளிதாக அணுகும் தன்மையும், அன்புள்ளமும் நிறைந்த அவர் ரசிகர்கள் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.

   இரண்டாம் உலகப் போரின் போது, அப்போதைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இசை நிகழ்ச்சி நடத்தி யுத்த நிதி வசூலித்துக் கொடுத்தார். இதற்காக ஆங்கிலேய அரசு அவருக்கு "திவான் பகதூர்' பட்டம் வழங்க முன்வந்த போதிலும், அதை ஏற்க பாகவதர் மறுத்துவிட்டார்.

 கடந்த 1938 ஆம் ஆண்டில் வெளியான சத்தியசீலன் படத்தில் "சொல்லு பாப்பா சுதந்திரம் பெற வழி ஒன்று சொல்லு பாப்பா' எனப் பாடினார். ஆனால், அப்போதைய ஆங்கிலேய அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, "சுதந்திரம் பெற' என்பதற்குப் பதிலாக சுகம் பெற' என மாற்றப்பட்டது. அவர் தேசியவாதி என்பதற்கு இது ஓர் அடையாளம்.

  மேலும், மகாத்மா காந்தி மீது அவர் மிகுந்த பற்று வைத்திருந்தார்.

எனவே, கடந்த 1948-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் மறைவுக்குப் பிறகு "காந்தியை போல் ஒரு சாந்த சொரூபனை...', "கைமாறு செய்வதுண்டோ காந்திஜிக்கு...' என்ற இரு பாடல்களைப் பாடினார். இந்தப் பாடல்கள் கொண்ட இசைத் தட்டு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

  கடந்த 1959-ம் ஆண்டில் வெளியான சிவகாமி படம் எடுத்துக் கொண்டிருந்த போது, இறுதிக் கட்டத்தில் பாகவதரின் உயிர் பிரிந்தது. அதனால், அந்தப் படத்தின் இறுதியில் அவரது இறுதி ஊர்வலத்தைக் காண்பித்தனர்.

   திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான அவர் திருச்சியைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் வாழ்ந்த ஊரில் ஒரு சிலைகூட இல்லை. மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தியாகராஜ பாகவதர் மன்றம் என்றழைக்கப்படும் கலையரங்க வளாகத்திலேயே அவரது திருவுருவச் சிலையை நிறுவ அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தியாகராஜ பாகவதரின் ரசிகர்கள் மட்டுமன்றி அவரது பற்றாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com