பி.எஸ்.என்.எல். தொழில்சங்கங்கள் இடையே கடும் போட்டி

திருச்சி, ஜன. 25: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொழில்சங்க அங்கீகாரத் தேர்தல் பிப். 1}ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக தொழில்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவு
Updated on
2 min read

திருச்சி, ஜன. 25: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் தொழில்சங்க அங்கீகாரத் தேர்தல் பிப். 1}ம் தேதி நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக தொழில்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தொழில்சங்க அங்கீகாரத் தேர்தல் 5}வது முறையாக பிப். 1-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப். 3-ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையப் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக இருந்து, இந்தத் தேர்தலைக் கண்காணிப்பார்கள். மேலும், தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் நடைபெறும்.

முதல் தேர்தலில் தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சம்மேளனம் (என்எப்டிஇ) தனித்துப் போட்டியிட்டு வென்றது. அடுத்த இரு முறையும் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் சங்கம் (பிஎஸ்என்எல்இயு) வேறு சில சங்கங்களையும் இணைத்துக் கொண்டு வென்றது.

கடந்த 2009-ம் ஆண்டு ஜன. 21}ம் தேதி நடைபெற்ற நான்காவது தேர்தலிலும் பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் சங்கமே (பி.எஸ்.என்.எல்.இ.யு.) வென்று "ஹாட்ரிக்' சாதனையைப் புரிந்தது.

தற்போது, 5-வது முறையாக நடைபெறும் இந்தத் தேர்தலில் நாடு முழுவதும் 2.29 லட்சம் பேரும், தமிழகத்தில் 17,700 தொழிலாளர்களும் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 340 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி தொலைத் தொடர்பு வட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 15 வாக்குச் சாவடிகளில் 1,765 தொழிலாளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று "ஹாட்ரிக்' சாதனை புரிந்த பி.எஸ்.என்.எல். தொழிலாளர்கள் சங்கக் கூட்டணியே மீண்டும் வெற்றி பெறுமா? அல்லது மாற்றம் ஏதும் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக உள்ள பிஎஸ்என்எல்இயு சங்கத்துடன் திமுக சங்கமான டிஇபியு மற்றும் சில எஸ்.சி. எஸ்.டி. சங்கங்கள் கூட்டணி அமைத்துள்ளன.

இவர்களுக்கு சவாலாகத் திகழும் தேசியத் தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் (என்.எப்.டி.இ.) சில எஸ்சிஎஸ்டி நலச் சங்கங்கள், ராஷ்டிரா யூனியன் (உத்தர பிரதேசம், பிகார்), சஞ்சார் நிகாம் டெலிகாம் தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் (எஸ்.என்.ஏ.டி.டி.ஏ) ஆகியவற்றுடன் இணைந்து களத்தில் இறங்கியுள்ளது.

 கடந்த முறை பி.எஸ்.என்.எல்.இ.யு. அணியில் இருந்த எஸ்.என்.ஏ.டி.டி.ஏ. சங்கம் தற்போது என்எப்டிஇ கூட்டணியில் இணைந்துள்ளது அவர்களுக்கு பலத்தை சேர்க்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 1-10-2000 அன்று தேர்வு செய்யப்பட்ட ஏறத்தாழ 18,000 தொழில்நுட்ப உதவியாளர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த இரு கூட்டணிகளுக்கு இடையேதான் போட்டி என்றாலும், பெடரேஷன் ஆப் நேஷனல் தொழிலாளர்கள் சங்கம் (எப்.என்.டி.ஓ) தனித்துப் போட்டியிடுகிறது.

தேர்தல் குறித்த என்.எப்.டி.இ. சங்க திருச்சி மாவட்டச் செயலர் எஸ். பழனியப்பன் கூறியது:

 "கடந்த 30 ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போனஸ் கடந்தாண்டு வழங்கப்படாதது தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் வெற்றி பெற்றால் போனஸ் பெற்றுத் தருவோம் என உறுதியளித்து உள்ளோம். மேலும், அதிகாரிகளுக்கு இணையாக 5 கட்டப் பதவி உயர்வுத் திட்டம் என அறிவித்துவிட்டு இதுவரை ஒரு பதவி உயர்வு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

 மேலும், கடந்த முறை எதிர் அணியில் இருந்த சில சங்கங்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால், இப்போது நிச்சயம் வெற்றி பெறுவோம்' என்றார் அவர்.

பிஎஸ்என்எல்இயு சங்கத்தின் மாவட்டச் செயலர் சி. சந்திரசேகரன் கூறியது:

"தொடர்ந்து மூன்று முறையாக எங்களது சங்கம் வெற்றி பெற்றுள்ளது. போனஸ் பிரச்னை என்பது அரசின் முடிவு. இந்த முறை தொழிலாளர்களுக்கு போனஸ் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எங்கள் சங்கம் மூலம் எடுக்கப்படும். அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ. 18,000 கோடியைத் திரும்ப வழங்க வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீட்டை இலவசமாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். நிச்சயமாக இந்த முறையும் எங்கள் சங்கம் வெற்றி பெறும்' என்றார் அவர்.

 தொழில் சங்கத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருப்பதால், தொழில்சங்கத்தினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி தொலைத்தொடர்பு மாவட்ட முதன்மைப் பொது மேலாளர் அலுவலகத்தில் எங்கு பார்த்தாலும் தொழில் சங்கங்களின் பதாகைகளே காணப்படுகின்றன. பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் "இலவசம்' இங்கும் வழங்கப்படுவதாகவே புகார் எழுந்துள்ளது. பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து நடைபெறும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று அங்கீகாரம் பெறப் போவது யார்? என்பது பிப்ரவரி 3-ம் தேதி தெரிய வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com