அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக் காவல் பிரிவு தொடங்கப்படுமா?
அரியலூர், ஜூலை 14: பெரம்பலூரிலிருந்து, அரியலூர் மாவட்டக் காவல் துறை தனியாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தில் இதுவரை போக்குவரத்துக் காவல் பிரிவு தொடங்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 201 கிராம ஊராட்சிகளைக் கொண்ட அரியலூர் மாவட்டம் பெரம்பலூரிலிருந்து 2007-ல் தனியாகப் பிரிக்கப்பட்டது. இந்த மாவட்டத்துக்கென காவல் கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டாலும், காவல் துறையின் நிர்வாகம் முழுவதும் பெரம்பலூர் மாவட்டக் காவல் பிரிவின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
கடந்த ஜூன் 3 ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டக் காவல் துறை அலுவலகத்திலிருந்து, அரியலூர் மாவட்டக் குற்றப் பிரிவு, குற்றப் பதிவேடுகள் பிரிவு, பொதுமக்கள் புகார் மையம் உள்ளிட்ட 13 பிரிவுகள் பிரிக்கப்பட்டு, அதற்கான அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், காவல் துறையின் முக்கியப் பிரிவான போக்குவரத்துக் காவல் பிரிவு அரியலூர் மாவட்டத்திற்கென இதுவரை தனியாக உருவாக்கப்படவில்லை.
தற்போது, ஆயுதப் படையில் உள்ள பெண் காவலர்கள்தான் அரியலூரில் போக்குவரத்துக் காவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதுவும் 4 முதல் 6 பேர்தான் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், திட்டக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் அரியலூருக்கு வந்து செல்லும் பேருந்துகள், சிமென்ட் ஆலைகளுக்குத் தேவையான உற்பத்திப் பொருள்கள், உற்பத்தி செய்யப்பட்ட சிமென்ட் மூட்டைகளை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் நாளுக்கு நாள் அரியலூரில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்துக் காவல் பிரிவு இதுவரை தொடங்கப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். இதுவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களாக இருந்தவர்கள் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், வெள்ளிக்கிழமை (ஜூலை 15) புதிய கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்க உள்ள கண்ணப்பன் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
பயன்பாட்டுக்கு வராத சிக்னல்கள்: அரியலூரில் போக்குவரத்து நெருக்கடியைக் கட்டுப்படுத்தும் வகையில், பேருந்து நிலையம், அண்ணா சிலை, தேரடி, வெள்ளாளத் தெரு சந்திப்பு, சத்திரம் சந்திப்பு, மாதாகோவில், புறவழிச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், ஜயங்கொண்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
ஆனால், இவை கடந்த ஒன்றரை மாதங்களாகச் சோதனை முறையில் மட்டுமே தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. எனவே, இதைச் சரிபடுத்தி, போக்குவரத்து சிக்னல்களின் செயல்பாட்டைத் தொடங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.