மயிலாடுதுறை, அக். 13: மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பேர் போட்டியிட்டாலும், அதிமுக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
நாகை மாவட்டத்தில், 12 கி.மீ. சதுர பரப்பளவைக் கொண்ட மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. 26,469 ஆண்களும், 26,469 பெண்களும் என மொத்தம் 52,754 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நகர்மன்றத் தலைவர் பதவி பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் பதவிக்கு செ. முல்லைநாயகி (அதிமுக), எஸ். பவானி (திமுக), எஸ். மரகதவள்ளி (காங்.), செ. ரூபா (பாமக), பா. அலமேலு (தேமுதிக), மு. பிரவீனா (பாஜக), பி. சுகந்தி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) என 7 வேட்பாளர்களும், உறுப்பினர் பதவியிடங்களுக்கு 254 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
நகர்மன்றத் தலைவர் பதவியைப் பொருத்தவரையில், திமுகவினரும், காங்கிரஸôருமே வெற்றிப் பெற்று வந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியதே இல்லை.
கடும் போட்டியில்... பல கட்சிகள் களத்தில் இருந்தாலும், அதிமுக, திமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
அதிமுக வேட்பாளர் செ. முல்லைநாயகி, அந்தக் கட்சியின் அரசியல் வழிவந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னையில் வசித்தாலும், மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது சகோதரர் எஸ். செந்தமிழன் கட்சியின் நகரச் செயலாளராக உள்ளார்.
"மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவது, மயிலாடுதுறையை மாவட்ட தலைநகராக்குவது, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையை உருவாக்குவது என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளுடன் முல்லைநாயகி மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார்.
அதிமுகவின் பலம்: மாநில அமைச்சர், எம்பி, திரைப்பட நடிகர்கள், எனப் பல்வேறு தரப்பினரும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதும், மாநிலத்தில் அதிமுக ஆட்சி இருப்பதால், நகர்மன்றத் தலைவர் பதவியையும் அந்தக் கட்சிக்கு அளித்தால், வளர்ச்சிப் பணிகள் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று பெரும்பாலான வாக்காளர்கள் கருதுவதும் அதன் வேட்பாளருக்கு பலம் சேர்ப்பதாக உள்ளது.
திமுகவின் பலம்: திமுக வேட்பாளர் எஸ். பவானி மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். இவரது கணவர் வழக்குரைஞராக இருப்பதுடன், நகர்மன்றத்தின் முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தவர். இவரும் புதிய பேருந்து நிலையம், மருத்துவமனை சீரமைப்பு, சுகாதாரச் சீர்கேடுகளை களைந்து, நகரில் தரமான சாலைகள் அமைய நடவடிக்கை எடுப்பேன் என்ற வாக்குறுதிகளுடன் களத்தில் உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் மயிலாடுதுறை நகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் நிர்வாகச் சீர்கேடுகள், குளறுபடிகள், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளிட்டவை இவருடைய பலவீனமாகக் கருதப்படுகிறது.
தேர்தல் பணியில் அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதல், வாக்குச் சேகரிக்கும் விதம், எளிமையான அணுகுமுறை ஆகியவை திமுகவின் பலமாக உள்ளது.
பிரசாரத்தை தீவிரப்படுத்திய திமுக: உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, சில தினங்கள் வரை அமைதியாக இருந்த திமுகவினர், அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலினின் மயிலாடுதுறைக்கு வந்த பின்னரே, தேர்தல் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக, திமுகவின் வெற்றி வாய்ப்பு சமநிலையில் இருந்தாலும், எஞ்சி உள்ள நாள்களில் இரு கட்சிகளின் வேட்பாளர்களும், கட்சியினரிடமும், மக்களிடமும் அணுகும் முறை, வாக்குச் சேகரிப்பில் பின்பற்றும் வழிமுறைகள் ஆகியவற்றைப் பொருத்தே மயிலாடுதுறை நகராட்சி யார் வசமாகும் என்பது முடிவாகும் என்பதே அரசியல்நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.