புத்தகம் இல்லாமல் தவிக்கும் காரைக்கால் மாணவர்கள்

காரைக்கால், செப். 15: காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பாடப் புத்தகங்கள் முறையாக வழங்கப்படாதது போன்றவற்றால், காலாண்டுத் தேர்வுக்கு தயாராக ம
Updated on
1 min read

காரைக்கால், செப். 15: காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, பாடப் புத்தகங்கள் முறையாக வழங்கப்படாதது போன்றவற்றால், காலாண்டுத் தேர்வுக்கு தயாராக முடியாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

  தமிழ்நாடு கல்வி வாரியத்தைப் பின்பற்றியே புதுவையில் கல்வித் திட்டம் உள்ளது. காரைக்காலுக்கு ஒவ்வொரு ஆண்டும் நாகப்பட்டினத்திலிருந்து பாடப் புத்தகங்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு கடலூரிலிருந்து வரவழைக்க கல்வித் துறை ஏற்பாடு

செய்தது.

  ஆனால், கடலூரிலிருந்து காரைக்காலுக்குத் தேவையான புத்தகங்களை அனுப்பிவைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. குறிப்பிட்ட சில வகுப்புகளுக்கு மட்டும் எனவும், அதிலும், சில பாடப் புத்தகங்கள் என்ற அளவிலுமே புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.

  மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்கள் சரியாகச் சென்றடையாததால், கடந்த ஆண்டு படித்த மாணவர்களிடமிருந்து சில மாணவர்கள் மட்டும் பழைய புத்தகங்களை வாங்கிப் படித்து வருகின்றனர்.

  பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த 10 நாள்களில் காலாண்டுத் தேர்வு தொடங்கவுள்ளதாம். இந்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில், காலாண்டுத் தேர்வு வரை புத்தகங்களை வழங்காமலும், ஆசிரியர் பற்றாக்குறையை அரசு போக்காமலும் உள்ளதால், தங்களது எதிர்காலம் குறித்து மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, காலாண்டுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

   இந்த நிலையில், இரண்டரை மணி நேரம் நடைபெற வேண்டிய தேர்வை ஒன்றரை மணி நேரத்தில் முடிக்கும் வகையில், அந்தந்தப் பள்ளி அளவில் தேர்வு வினாத்தாள் தயாரிக்குமாறு கல்வித் துறை கூறியுள்ளதாம்.

   மேலும், ஆங்கிலம், தமிழ்ப் பாடங்களில் உள்ள 2 வினாத்தாள்களுக்குப் பதிலாக ஒரே நேரத்தில் எழுதும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  இதுகுறித்து புதுவை மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் த. அசோக் கூறியது:

  புத்தகங்கள் சரியான நேரத்தில் கிடைக்காதது பெரும் குறை என்பதோடு, ஆசிரியர் பற்றாக்குறையும் மாணவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்திவிட்டது. இனிமேல் நியமிக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பாடம் எடுப்பதும் சுமைதான். எனவே, ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க புதுவை அரசு நிரந்தர நடவடிக்கையை இப்போதே எடுக்க வேண்டும் என்றார் அவர்.

   காரைக்காலில் கல்வித் துறையில் இணை இயக்குநர் நிலையில் அதிகாரி நியமிக்கப்பட்டால், இதுபோன்ற சில பிரச்னைகளை கட்டுப்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி ஒரு தனிக் குழு அமைத்து, காரைக்காலில் நிலவும் கல்வித் துறை தொடர்பான பிரச்னைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

  அந்தக் குழு தரும் அறிக்கையின்படி உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி பாதிப்பின்றி தொடர வழிவகை செய்ய வேண்டும் என காரைக்கால் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com