குளித்தலை பெரியார் பாலத்தின் அருகே மணல் எடுப்பது தடுக்கப்படுமா?

குளித்தலை, ஏப். 18: குளித்தலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தின் அருகே மணல் எடுப்பதால் பாலம் சேதமடையும் அபாயம் உள்ளதால், மணல் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப

குளித்தலை, ஏப். 18: குளித்தலையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தந்தை பெரியார் பாலத்தின் அருகே மணல் எடுப்பதால் பாலம் சேதமடையும் அபாயம் உள்ளதால், மணல் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து திருச்சி மாவட்டப் பகுதியான முசிறியை இணைக்கும் வகையில் காவிரியாற்றின் குறுக்குப் பாலம் ஒன்று உள்ளது. இப்பாலம் கட்டப்படுவதற்கு முன் குளித்தலையில் இருந்து முசிறிக்கு பரிசலில் மட்டுமே செல்ல முடியும். இதனால், இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி இப் பாலம் கட்டப்பட்டது.

   கடந்த 1971-ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் இப்பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1979-ல் அவராலேயே திறக்கப்பட்டது.

   இப்பாலத்தைக் கட்ட ரூ. 1.39 கோடி செலவிடப்பட்டது. சுமார் 1.5 கி.மீ. தொலைவு உடைய இப்பாலம், காவிரி ஆறு தொடங்கும் இடத்தில் இருந்து, அது கடலில் கலக்கும் இடம் வரை உள்ள பகுதியில் கட்டப்பட்ட மிகப் பெரிய பாலம் ஆகும். இதற்கு தந்தை பெரியார் பாலம் எனப் பெயரிடப்பட்டது.

   இப்பாலத்தைக் கட்டிய பிறகு குளித்தலையில் இருந்து முசிறி, துறையூர், பெரம்பலூர், சென்னை, நாமக்கல், சேலம், பெங்களூர் உள்ளிட்ட நகரப் பகுதிகளுக்கு சுலபமாகச் சென்று வர இப்பாலம் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

    கடந்த 30 ஆண்டுகளாக குளித்தலையில் இருந்து முசிறியில் உள்ள அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஏராளமானோர் தினசரி இப்பாலம் வழியாகச் சென்று வருகின்றனர்.

   இந்நிலையில், கடந்த 2007-ல் பழுதடைந்த இப்பாலத்தைச் சீரமைக்க தமிழக அரசு ரூ. 2.94 கோடி செலவிட்டது. 2007-ல் இப்பாலம் சீரமைக்கப்பட்ட நேரத்தில் குளித்தலையில் இருந்து பல்வேறு பணிகளுக்காக முசிறி செல்வோர் பெரும் பாதிப்புள்ளாகினர். மேலும், முக்கிய நகரப் பகுதிகளுக்கு இப்பாலம் வழியாகச் சென்ற பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் சுமார் 40 கி.மீ. தொலைவு கூடுதலாக திருச்சி, கரூருக்குச் சென்று மற்ற பகுதிகளை அடைந்தனர்.

     கரூர், திருச்சி மாவட்டப் பகுதிகளை இணைக்கும் ஒரு வழியாக இப்பாலம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத் தக்கது.

    தற்போது இப்பாலத்தின் அருகிலேயே அண்மைக்காலமாக  மணல் எடுக்கப்படுவதால், இப்பாலம் மீண்டும் சேதமடையும் நிலை உருவாகியுள்ளது. இந்தப் பாலத்தின் அருகே மாட்டுவண்டி மூலமே மணல் எடுக்கப்பட்டு வருகிறது.

காவிரியாற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டி மற்றும் பாலம் உள்ள பகுதியில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் இருந்துதான் மணல் எடுக்க வேண்டும் என மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் உத்தரவிடப்பட்டிருந்தது.

    ஆனால், தற்போது இந்த உத்தரவை மீறி பாலத்தின் அடிப்பகுதிலேயே மாட்டுவண்டி மூலம் மணல் எடுக்கப்படுகிறது. இதனால், பாலத்தின் மேற்பகுதியைத் தாங்கும் வகையில் ஆற்று மணலில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரிட் தூண் பலவீனம் அடையும் நிலையில் காணப்படுகிறது.

    ஆற்று மணலில் அமைக்கப்பட்டுள்ள இத்தூணின் அடிப்பகுதி வரை வெளியில் தெரியும் அளவுக்கு உள்ளது. பாலத்தின் அருகில் மணல் எடுக்கும் படலம் தொடர்ந்தால், இத்தூண்கள் பலம் இழந்து உடைந்து விழும் நிலை ஏற்படும்.

   இதனால், இந்தப் பாலமே உடைந்து ஆற்றில் விழுந்துவிடும் அபாய நிலை உருவாகும்.

   2007-ல் இப்பாலத்தின் மராமத்து பணிகளை மேற்கொள்ளவே பல மாதங்கள் ஆகின. இதனால், போக்குவரத்துக்கு வழியின்றி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

   இந்நிலையில், இப்பாலம் உடைந்த விழுந்தால் பொதுமக்கள், வாகனங்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப்போகும் நிலை ஏற்படும்.

  மாட்டுவண்டி மூலம் ஆற்றில் ஒருமுறை மணல் எடுக்க பொதுப்பணித்துறை (ஆற்றுப் பாதுகாப்பு) மூலம் மாட்டுவண்டி உரிமையாளர்களிடம் ரூ. 42 வசூலிக்கப்படுகிறது. இத்தொகையைப் பெற்றுக்கொண்டு, இதற்கான ரசீது வழங்க இத்துறையைச் சார்ந்த அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

   இவர் காவிரி ஆற்றிலிருந்து மணல் எடுத்துக் கொண்டு மாட்டுவண்டி வரும் வழியிலேயே அமர்ந்துகொண்டு, தனக்கென ஒதுக்கப்பட்ட வசூலிக்கும் பணியை மட்டும் மேற்கொள்கிறார்.

   மாட்டுவண்டி மூலம் மணல் எடுப்பவர்களிடம் தொகையை வசூலிப்பதில் மட்டும் அக்கறை காட்டும் அதிகாரிகள், மாட்டுவண்டி தொழிலாளர்களின் விதிமீறல், பாலத்தின் உறுதிநிலை, இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அக்கறை காட்டுவதில்லை. இச்செயல் அதிகாரிகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது என்கின்றனர் பொதுநல ஆர்வலர்கள்.

   மேலும், இதுகுறித்து பல முறை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கின்றனர். எனவே, தந்தை பெரியார் பாலம் உடைந்து விழும் முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com