அறந்தாங்கி அருகே பழங்காலக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூன் 28: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் உள்ள சுனையக்காட்டிலும், நற்பவளக்குடியிலும் பழங்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.  இதுதொடர்பாக புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வரலாற்

புதுக்கோட்டை, ஜூன் 28: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் உள்ள சுனையக்காட்டிலும், நற்பவளக்குடியிலும் பழங்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

 இதுதொடர்பாக புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் அ. சந்திரபோஸ், மேலப்பனையூர் ஓய்வு பெற்ற ஆசிரியரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான கரு. ராசேந்திரன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 அறந்தாங்கி அருகேயுள்ள சுனையக்காடு, நற்பவளக்குடி பகுதிகளில் மூன்று கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

 அவற்றில் பாலையவனத்தைத் தலைமையகமாகக் கொண்டு, கி.பி. 17 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா விடுதலை அடையும் வரை பாலையூர் பகுதியை ஆட்சி செய்தவர் பண்டாரத்தார் என அழைக்கப்பட்ட பாலைவன ஜமீன்தார்கள்.

 சிற்றம்பலக் கவிராயர் இயற்றிய இலக்கியங்களில் ஆண்டவராயன் கோவை, ஆண்டவராயன் கட்டளைக் கலிப் பா, ஆண்டவராயனின் மகன் குழந்தைத்துரை பற்றிய பால கவி, ஆண்டவராயன் வண்ணம், ஆண்டவராயன் காமகவிருத்தம் ஆகியவை பாலையவனம் ஜமீன்தார்களைப் பற்றியதாகும். ஆண்டவராய வணங்காமுடி பண்டாரத்தின் மீது சிற்றம்பலக் கவிராயர் பாடிய இலக்கியங்களுக்காக அவரிடமிருந்து பரிசில்கள் பெற்றுள்ளார்.

 பாலையவனம் பண்டாரத்தார் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது முதல் முறையாக பாலையவனம் பண்டாரத்தார் பற்றிய கல்வெட்டு ஒன்று சுனையக்காட்டில் கண்டெடுக்கப்பட்டது.

 இந்தக் கல்வெட்டு சுனையக்காட்டில் உள்ள கிணற்றில் (சுனை) உள்ளது. தரையோடு அமைந்த செம்பராங்கல்பாறையில் இந்தக் கிணறு எடுப்பிக்கப்பட்டுள்ளது.

 இந்தக் கிணற்றின் நீர்மட்டம் மழைக் காலத்தைப் போன்றே வெயில் காலத்திலும் சமநிலையில் உள்ளதே இதன் சிறப்பாகும். இதனால், இதைச் சுனை என்று மக்கள் அழைக்கின்றனர்.

 பிரபவ ஆண்டில் இந்தக் கிணற்றை விஜய அருணாசல வணங்காமுடி பண்டாரத்தார் பிரதிஷ்டை செய்தார் என்று கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

 இதன் காலம் கி.பி. 1687 ஆகும். இது பாலையவனம் பண்டாரத்தார் வரலாற்றை அறிய உதவும் ஓர் அரிய கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும், நற்பவளக்குடியில் மேற்கொண்ட ஆய்வின் போது இரண்டு புதிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று கல்லில் எழுதப்பட்டு ஐயப்பன் கோயில் வளாகத்தில் கிடத்தப்பட்டுள்ளது. இது அறந்தாங்கி அரசுபிச்சா தொண்டைமான் பற்றியதாகும்.

 கி.பி. 1418 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டு, அறந்தாங்கி அரசு உடையா பிச்சா தொண்டைமான், காடவராய பட்டனுக்கு கூத்தனூர் வயலில் ராசகரம் (அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி) கழித்துக் கொடுத்த நிலம் பற்றிக் கூறுகிறது. இது பிச்சா தொண்டைமான் பற்றிய இரண்டாவது கல்வெட்டு ஆகும்.

 இவரது முதல் கல்வெட்டு ஆலங்குடி வட்டம், பழங்கரை புராதனபுரீசுவரர் கோயிலில் உள்ளது.

 இதே ஊரில் ஐயப்பன் கோயில் முன்பாக நடப்பட்டுள்ள கல்லில் உள்ள மற்றொரு கல்வெட்டு கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

 இவ்வூர் கம்பன் முதலிமான் அலைவில் அஞ்சாத நல்லூரில் நிலங்கள் தானம் வழங்கியதைப் பற்றிக் கூறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com