புதுப் பொலிவு பெறும் மகளிர் சுகாதார வளாகங்கள்!

பெரம்பலூர், பிப். 5: கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பயன்படுத்தப்படாமல் சிதிலமடைந்த நிலையிலிருந்த மகளிர் சுகாதார வளாகங்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செ
Updated on
2 min read

பெரம்பலூர், பிப். 5: கடந்த 5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி, பயன்படுத்தப்படாமல் சிதிலமடைந்த நிலையிலிருந்த மகளிர் சுகாதார வளாகங்கள் தற்போது சீரமைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறப் பெண்கள் சுகாதாரத்தைப் பேணவும், சுற்றுச்சூழலைக் காக்கவும், சுகாதாரமான கிராமங்கள் உருவாகவும் கடந்த அதிமுக ஆட்சியின் போது உருவாக்கப்பட்டதுதான் மகளிர் சுகாதார வளாகங்கள் அமைக்கும் திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 385 ஊராட்சிகளிலுள்ள 12,618 கிராம ஊராட்சிகளிலும், அதிக மக்கள் வாழும் கிராமப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தக் கிராமங்களில் ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில், ரூ. 2.75 லட்சம் மதிப்பில் சம்பந்தப்பட்ட தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும், மத்திய அரசின் முழு சுகாதாரத் திட்டத்தின் கீழும் ரூ. 1.25 லட்சத்தில் மகளிர் சுகாதார வளாகங்கள் உருவாக்கப்பட்டன.

மகளிர் சுகாதார வளாகங்கள் கழிப்பிடம், குளியலறை, துணி துவைக்கும் தொட்டி, ஆழ்குழாய்க் கிணறு, மின் வசதி, மோட்டார், சாலை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டது. மகளிருக்கு மட்டுமன்றி, அவர்களுடன் செல்லும் குழந்தைகளுக்கென தனிக் கழிப்பறை வசதிகளும் அமைக்கப்பட்டன. மேலும், சமூக விரோதிகள் உள்ளே செல்லாத வகையில், அனைத்து வளாகங்களிலும் சுற்றுச்சுவர் மற்றும் இரும்புக் கம்பிகளால் வேலி அமைத்து பராமரிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து வெளியேற்றப்படும் நீர் வீணாகாமல் இருக்க, சுகாதார வளாகங்களின் அருகில் காய், கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்தத் திட்டம் தொடங்கிய காலத்தில் கிராமப் பெண்கள் சுகாதார வளாகங்களை முறையாகப் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் வசதி, மின் வசதி, துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாததால், கிராமப் பெண்கள் அந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்களைப் பயன்படுத்தாமல் புறக்கணித்தனர்.

இதனால் செடி, கொடிகள் வளர்ந்து, ஒரு சில கிராமங்களில் மகளிர் சுகாதார வளாகங்கள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இந்தத் திட்டம் தற்போது, 10 சதத்துக்கும் குறைவான கிராமங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிதிலமடைந்த நிலையில் இருக்கும் மகளிர் சுகாதார வளாகங்களைச் சீரமைக்க வேண்டும் என பரவலாகக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகங்களைச் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என புதிதாகப் பொறுப்பேற்ற அதிமுக அரசு கடந்த ஜூலையில் உத்தரவிட்டது.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுகாதார வளாகங்கள் கணக்கெடுக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அவற்றைச் சீரமைப்பதற்கான பணிகளுக்கு ஒப்பந்தமும் விடப்பட்டது.

இதனடிப்படையில், தமிழகம் முழுவதும் சேதமடைந்த மகளிர் சுகாதார வளாகங்களில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 75 சதப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

புதுப்பிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்கள் அனைத்தையும் விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராமப்புறப் பெண்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகளிர் சுகாதார வளாகங்களுக்கு பெண் துப்புரவுப் பணியாளர்கள் நியமித்து, அவர்களுக்கு மாதம்தோறும் ஊதியம் வழங்க வேண்டும். மகளிர் சுகாதார வளாகங்களுக்கு மின் கட்டணம், மோட்டார் பழுது நீக்குவது உள்ளிட்ட அடிப்படை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 10 ஆயிரம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

திட்டத்தை முறையாகச் செயல்படுத்தி வந்தால், சுகாதாரம் குறித்து கிராமப்புற பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படும். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பெண்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com