பெரம்பலூர், பிப். 21: பெரம்பலூர் நகராட்சி பகுதிக்கு உள்பட்ட வார்டுகளில் சேதமடைந்துள்ள சுகாதார வளாகங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நகராட்சிக்கு உள்பட்ட துறைமங்கலம், அரணாரை, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் 21 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதியில் தற்போது 23 சுகாதார வளாகங்கள் உள்ளன.
ரூ. 6.50 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 10-க்கும் மேற்பட்ட சுகாதார வளாகங்களில் மின் வசதி, தண்ணீர் வசதி, சாலை வசதி, சுற்றுச்சுவர் மற்றும் பெண்கள் துணி துவைப்பதற்கான வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக புதிதாக கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகங்களில் போதிய பராமரிப்பின்றி தண்ணீர், மின் விநியோகம் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டதால், சுகாதார வளாகங்களை பயன்படுத்தி வந்த பொதுமக்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இதனால் மின் விளக்குகள், தண்ணீர் குழாய்கள், நீர்த்தொட்டி, சுற்றுச்சுவர், இரும்பு கதவுகள் உள்பட அனைத்து தடவாளப் பொருள்களும் சேதமடைகின்றன.
இதேபோல, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கான இலவச மற்றும் நவீன கட்டண கழிவறைகள் உள்ளன. இலவச கழிவறைகளில் தண்ணீர் மற்றும் மின் விளக்கு வசதிகள் இல்லாததாலும், போதிய பராமரிப்பு இல்லாததாலும் பல மாதங்களாகவே பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
மேலும், அந்தப் பகுதிகளில் தற்போது முள்புதர்கள் வளர்ந்து காடு போல காட்சியளிக்கிறது.
தனியார் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நவீன கட்டண கழிப்பிடங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. மேலும், நகராட்சி நிர்வாகம் அனுமதித்த கட்டணத்தைவிட, பயணிகளிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து கழிப்பிடங்களும் பராமரிப்பின்றி உள்ளதால், பொதுமக்களும், பயணிகளும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால், திறந்தவெளி பகுதிகளே தற்போது கழிப்பிடங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, நகராட்சிக்கு உள்பட்ட கழிப்பிடங்கள் மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்களில் போதிய வசதிகளின்றி அவதிப்பட்டு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை விரைவில் நிறைவேற்ற பெரம்பலூர் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.