ஜெனரேட்டர் வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி

பெரம்பலூர், பிப். 28: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை நிலையங்களில் போதுமான ஜெனரேட்டர் வசதி இல்லாததால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Updated on
2 min read

பெரம்பலூர், பிப். 28: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை நிலையங்களில் போதுமான ஜெனரேட்டர் வசதி இல்லாததால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூரில் அரசு தலைமை மருத்துவமனையும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 25 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 90 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன.

இவற்றில், பெரம்பலூரில் உள்ள தலைமை மருத்துவமனையிலும், காரை, அம்மாபாளையம், வாலிகண்டபுரம், பூலம்பாடி, லப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஜெனரேட்டர் வசதி உள்ளது.

மற்ற சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் யு.பி.எஸ். மற்றும் சார்ஜ் ஏற்றும் விளக்குகளின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் இதுபோன்ற எந்த வசதிகளும் ஏற்படுத்தித் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

பெரம்பலூர் நகரைப் பொருத்தவரை தினமும் சுமார் 9 மணி நேரமும், கிராமப்புறங்களில் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக மின் தடை செய்யப்படுகிறது. இதனால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினமும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் விபத்தில் காயமடையும் பெரும்பாலானோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். அங்குள்ள ஜெனரேட்டர் மூலம் மருத்துவமனையில் உள்ள அனைத்து சிகிச்சைப் பிரிவுகளுக்கும் மின் விநியோகம் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், ஒரு மாதத்துக்கு ரூ. 1.80 லட்சம் மதிப்பிலான டீசல் பயன்படுத்தப்பட்டது. டீசல் வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால், தற்போது மருத்துவமனையின் மேம்பாட்டு நிதி, மற்ற நிதியின் மூலம் டீசல் வாங்கப்பட்டு ஜெனரேட்டரை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஜெனரேட்டர்களுக்கு டீசல் வாங்க போதுமான நிதி இல்லாததால், மருத்துவர்களின் சொந்தச் செலவில் டீசல் வாங்குவதாகவும், ஒரு சில சுகாதார நிலையங்களில் ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இரவில் மட்டுமன்றி, பகலிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் மருத்துவர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கிராமப்புறங்களில் காயமடைந்து வரும் நோயாளிகள் மற்றும் பிரசவத்துக்காக வருபவர்கள் பெரம்பலூர் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்களாம்.

அங்கு போதுமான மருத்துவ வசதிகளும், நவீன கருவிகளும் இல்லாததால், திருச்சியில் உள்ள தனியார் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பிவைக்கும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதில், ஒரு சில நோயாளிகள் பாதி வழியிலேயே உயிரிழந்து விடுகின்றனர்.

திங்கள்கிழமை முதல் நகர்ப்புறங்களில் 4 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், ஏற்கெனவே இருந்த மின் தடையே இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை நிலையங்களுக்கு ஜெனரேட்டர் வசதியும், பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் ஜெனரேட்டர் வசதியும் ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com