சாலைப் பாதுகாப்பு: தொடர் விழிப்புணர்வு தேவை

பெரம்பலூர், ஜன. 5: சாலைப் பாதுகாப்பு வார விழாவின் போது மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைக்குப் பதிலாக, ஆண்டு முழுவதும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பெரம்பல
Updated on
2 min read

பெரம்பலூர், ஜன. 5: சாலைப் பாதுகாப்பு வார விழாவின் போது மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைக்குப் பதிலாக, ஆண்டு முழுவதும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பெரம்பலூர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆண்டுதோறும் ஜன. 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அப்போது, பல்வேறு சாலை விதிகள் மற்றும் சாலையில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

மாவட்ட நிர்வாகம், காவல் துறை, போக்குவரத்துத் துறை, தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தப்படுகின்றன.

இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒரு வாரத்துக்கு மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றன. அதன்பிறகு, அதைப் பற்றி யாருமே கண்டுகொள்ளாததால், வழக்கம்போல சாலை விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

இதனால், நாளுக்கு நாள் நிகழ்ந்து வரும் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே போகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 2010-ம் ஆண்டில் நிகழ்ந்த 131 சாலை விபத்துகளில் 151 பேர் உயிரிழந்தனர். 353 சிறிய விபத்துகளில் 973 பேர் காயமடைந்தனர்.

2011-ம் ஆண்டில் நிகழ்ந்த 145 சாலை விபத்துகளில் 166 பேர் உயிரிழந்தனர். 327 சிறிய விபத்துகளில் 961 பேர் காயமடைந்தனர். 2010-ம் ஆண்டைவிட, 2011-ம் ஆண்டில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

இதற்கு வாகன ஓட்டுநர்களுக்கும், பாதசாரிகளுக்கும் விழிப்புணர்வு இல்லாததே பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. சாலையின் தரம் உயர்த்தப்பட்ட பின்னரும், விபத்துகள் தொடர்வதற்கு காரணம், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதுதான்.

போக்குவரத்துக் காவலர்கள் தங்களது கடமையை முறையாகச் செய்தாலே 90 சத சாலை விபத்துகளைத் தடுக்கலாம் என வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இரவு நேர விபத்துகளுக்கு காரணமான ஹாலோஜன் பல்புகளை தடை செய்வது, வாகனங்களின் பின்புறம் ஒளிரும் எச்சரிக்கை வில்லைகளை முறையாகப் பயன்படுத்துவது, பழுதான வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்தால், அதனருகே முக்கோண அமைப்பிலான விபத்து எச்சரிக்கை பலகையை வைத்தல் உள்ளிட்ட பணிகளைக் கண்காணிப்பது போக்குவரத்து காவலர்களின் கடமையாகும். ஆனால், அதை அவர்கள் முறையாகச் செய்வதில்லை எனப் புகார் தெரிவிக்கப்படுகிறது.

இதனால், பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

எனவே, அதிக வேகம், மது அருந்தி வாகனம் ஓட்டுவது, முறையான பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது போன்றவற்றைக் கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், ஹெல்மெட் அணியும் சட்டத்தைக் கட்டாயமாக்கி, தமிழகம் முழுவதும் அதைக் கடைப்பிடிக்கவும், ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுபோல, மாவட்டம் தோறும் பெயரளவுக்கு சாலைப் பாதுகாப்பு வார விழாவை நடத்துவதைவிட, ஆண்டு முழுவதும் தொடர் விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், பேரணி, துண்டுப் பிரசுரங்கள் அளித்தல் போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com