மன்னார்குடி, ஜன. 11: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் புதிய அகலப் பாலம் கட்டும் பிரச்னையில் கட்சி அரசியலைப் புறந்தள்ளி, தேவையான நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மன்னார்குடியில் பாமணி ஆற்றின் குறுக்கே தற்போதுள்ள புதுப்பாலம் அமைக்கப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆகின்றன. சிதிலமடையும் நேரங்களில் நகராட்சி சார்பில் பாலத்தில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், 2010, ஆகஸ்ட் மாதம் பாலத்தின் நடுப்பகுதி இடிந்து விழுந்தது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடிந்த பகுதியில் மரக்கட்டைகளைப் பொருத்தி, தாற்காலிகமாகப் பாலத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்தது நகராட்சி.
இந்தப் பழைமையான பாலத்தை அகற்றிவிட்டு, புதிதாக அகலப் பாலம் கட்டித் தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், புதிய நகர்மன்றத் தலைவராக பதவியேற்றுள்ள டி. சுதா அன்புச்செல்வன் (அதிமுக), புதுப்பாலத்தைச் சீரமைக்க நகராட்சி சார்பில் ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்து, பணிகள் தொடங்கவுள்ளன என்று அறிவித்துள்ளார்.
இந்தப் பணிகளை உடனடியாகக் கைவிட வேண்டும். வாகன போக்குவரத்துக்கும் பயன்படும் வகையில், புதிதாக அகலப் பாலம் அமைத்துத் தர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
"புதிய அகலப் பாலம் கட்டித் தர நிதி ஒதுக்கீடு செய்து தர ஒத்துக் கொண்ட தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, இதுதொடர்பாக நகராட்சியிலிருந்து திட்ட மதிப்பீடு கோரினார். ஆனால், நகராட்சி பொறியியல் பிரிவு அலுவலர்கள் அதை வழங்காமல் தாமதம் செய்து வருகின்றனர்' என்று புதுப்பாலம் அமைந்துள்ள பகுதியின் நகர்மன்ற உறுப்பினர் கண். மணிவண்ணன் தெரிவித்திருந்தார்.
ஆனால், மணிவண்ணன் கூறுவதை நகர்மன்றத் தலைவர் முழுவதுமாக மறுக்கிறார். இதுதொடர்பாக நகர்மன்றத் தலைவர் சுதா அன்புச்செல்வன் கூறியது:
"புதுப்பாலத்தைச் சீரமைக்க ரூ. 10 லட்சம் செலவாகும் என பொறியியல் துறையினர் திட்ட மதிப்பீடு செய்தனர். இதற்குத் தேவையான நிதி முழுவதையும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அளிப்பதாகத் தெரிவித்துவிட்டு, பின்னர், ரூ. 5 லட்சம் மட்டுமே வழங்குவதாக அவர் கூறியதாகத் தெரிய வந்தது. இதையடுத்து, புதுப்பாலத்தைச் சீரமைக்க தேவையான நிதியை நகராட்சியே ஒதுக்கீடு செய்து, பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
உறுப்பினர் மணிவண்ணன் கூறுவதுபோல, புதிதாகப் பாலம் கட்டத் தேவையான முழு நிதியையும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்க திட்ட மதிப்பீடு கேட்டு, நகராட்சி நிர்வாகத்தை யாரும் அணுகவில்லை. நாங்கள் ஒத்துழைப்பு தரவில்லை எனக் குறை கூறுபவர்கள், பொதுப் பணித் துறை மூலம் பணியை மேற்கொள்ளலாமே. புதிதாகப் பாலம் கட்டுவது என்றால், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஆகும்.
இதற்கு நகராட்சி நிர்வாகத்தில் நிதி ஆதாரம் குறைவு என்பதால், புதிய பாலம் கட்டும் திட்டம் சாத்தியப்படாது என்பதை அறிந்து, பொதுமக்கள் பாதிப்படையக் கூடாது என்ற காரணத்தால், தாற்காலிகமாக புதுப்பாலம் சீரமைக்கப்படவுள்ளது.
மன்னார்குடியைச் சேர்ந்தவரும், மாநில உணவுத் துறை அமைச்சருமான ஆர். காமராஜ் மூலம் விரைவில் அரசிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்று, புதிதாக அகலப் பாலம் கட்டப்படும் என்றார் அவர்.
இதுகுறித்து தொகுதியின் திமுக எம்எல்ஏவான டி.ஆர்.பி. ராஜா கூறியது:
புதிதாகப் பாலம் கட்ட நகராட்சி பொறியாளர்களிடம் பலமுறை திட்ட மதிப்பீடு கேட்டும், இதுவரையில் வழங்கப்படவில்லை. மற்ற வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக திட்ட மதிப்பீடு கேட்டாலும், தரப்படுவதில்லை. இந்த நிலை தொடர்ந்தால், மாவட்ட நிர்வாகத்தை அணுகி, திட்டங்களுக்கான மதிப்பீடு பெற்று, தொகுதியை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
புதுப்பாலத்தை ரூ. 10 லட்சத்தில் சீரமைத்தாலும், பாலத்தின் உறுதித் தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. புதிதாகப் பாலம் கட்ட ரூ. 1.20 கோடி செலவு ஆகும் என தனியார் மதிப்பீட்டின் மூலம் தெரிய வந்துள்ளது. தொகுதி நிதியிலிருந்து புதிதாகப் பாலம் கட்டுவது உறுதி. அரசியல் வேறுபாட்டின் காரணமாக, என் மீது நகர்மன்றத் தலைவர் குற்றம் சுமத்தக் கூடாது என்றார் அவர்.
மன்னார்குடியின் பிரதான பிரச்னையாக உருவெடுத்துள்ள புதிய அகலப் பாலம் கட்டும் திட்டத்தில் அரசியல் கலந்ததால், அது கௌரவ பிரச்னையாக மாறி, திட்டத்துக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டு அரசியல், ஆட்சி மாற்றம் காரணமாக, பாதியில் நின்றுபோன உள்விளையாட்டு அரங்கம், தேரடி பொதுமேடை ஆகியவற்றின் நிலை போல, புதிய பாலம் கட்டும் பணியும் ஆகிவிடுமோ என்ற அச்சம் நகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்

தவெக தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

