நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா?

பெரம்பலூர், மார்ச் 1: பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், வேப்
Updated on
2 min read

பெரம்பலூர், மார்ச் 1: பெரம்பலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வட்டாரத்தில் 1,794 ஹெக்டேர் பரப்பளவிலும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 6,939 ஹெக்டேர் பரப்பளவிலும், ஆலத்தூர் வட்டாரத்தில் 2,039 ஹெக்டேர் பரப்பளவிலும், பெரம்பலூர் வட்டாரத்தில் 2,744 ஹெக்டேர் பரப்பளவிலும் என 13,516 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்திலேயே வேப்பந்தட்டை வட்டாரத்தில்தான் அதிகளவிலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் பகுதியில் கடந்த 2010- 2011 ஆம் ஆண்டில் அரசு கொள்முதல் நிலையம் சார்பில், விவசாயிகளிடமிருந்து 1,237 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு மாவட்டம்தோறும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரும்பாவூர், வி. களத்தூர், கை. களத்தூர், ஒகளூர், அகரம் சிகூர், எழுமூர், நன்னை, துங்கபுரம் உள்ளிட்ட 8 பகுதிகளில் தாற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

100 கிலோ எடை கொண்ட முதல் தர நெல் ரகங்கள் ஒரு குவிண்டால் ரூ. 1,100-க்கும், பொது தர நெல் ரகங்களை ரூ. 1050-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.

இதையறிந்த விவசாயிகள், இடைத்தரகர்களிடம் விற்பனை செய்வதைத் தவிர்த்து, அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்தனர். இதனால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கவில்லை என்றாலும், சாகுபடி செய்ததற்கான பலனை அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நிகழாண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அரசு நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதையறிந்த, இடைத்தரகர்கள் அறுவடை செய்யப்பட்ட விவசாயிகளிடம் முதல் தர நெல் ரகங்களை ரூ. 800-க்கும், பொது ரக நெல் ரகங்களை ரூ. 750-க்கும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

மேலும், எடை மோசடி மூலமாக நெல் வியபாரிகளும், இடைத்தரகர்களும் ஏமாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இடுபொருள் விலையேற்றம், உர விலை உயர்வு, ஆள் பற்றாக்குறை, மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள், தற்போது நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் இருப்பதால், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், நெல் அறுவடை தொடங்க உள்ளதால், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாய சங்கத் தலைவர்களும், பிரதிநிதிகளும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வேப்பந்தட்டை வட்டார நெல் விவசாய ஆர்வலர்கள் குழுத் தலைவர் கு. வரதராசன் கூறியது:

வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள அரும்பாவூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளான மளையாளப்பட்டி, கொட்டாரக்குன்னு, தழுதாழை, அ. மேட்டூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

ஆனால், நெல் கொள்முதல் நிலையம் திறக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவில்லை எனில், வியபாரிகள் குறைவான விலைக்கு கொள்முதல் செய்வதுடன் எடை மோசடியில் ஈடுபடுவார்கள். இதனால், விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்படுவார்கள்.

தற்போதுள்ள கொள்முதல் விலையை தேசிய விவசாய ஆணையத்தின் பரிந்துரையின்படி, செலவுடன் 50 சதம் சேர்த்து, குறைந்தபட்சமாக நெல் குவிண்டாலுக்கு ரூ. 1800 வழங்கவும், பெரம்பலூர் மாவட்டத்தில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைப்போல, நிகழாண்டிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com