ராணிப்பேட்டை, மார்ச் 17: ராணிப்பேட்டை சிப்காட் தொழிலாளர் குடியிருப்புகள் பராமரிப்பின்றி, புதர் மண்டியுள்ளது. இதனால், இங்கு அச்சத்துடன் வசிப்பதாக தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர்.
1973-ம் ஆண்டு தமிழக அரசால் ராணிப்பேட்டையில் சிப்காட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டன. இப்போது வேலூர் மாவட்டத்தின் முக்கியத் தொழில் நகரமாக இந்நகரம் உள்ளது.
இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அலுவலர்களுக்காக பொதுப்பணித் துறையின் சார்பில், 132 குடியிருப்புகளாக சுமார் 10-க்கும் மேற்பட்ட தனித்தனியாக 3 அடுக்கு வளாகங்கள் 1974-ம் ஆண்டில் கட்டப்பட்டன. இவற்றில் சாலை, குடிநீர், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளும் இடம் பெற்றிருந்தன. பின்னர் இந்த வளாகம் சிப்காட் திட்ட அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, தொழிலாளர்களிடம் மாத வாடகையாக இக்குடியிருப்பில் உள்ள வீடுகள் அளிக்கப்பட்டன.
இப்போது மாத வாடகையாக ரூ.1,250 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், இக்குடியிருப்பு சரிவரப் பராமரிக்கப்படாததால் இங்கிருந்து தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் வெளியேறிவிட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. 132 குடியிருப்புகளில் 15-ல் மட்டுமே தொழிலாளர்கள் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. "சரிவர பராமரிப்பு இல்லாததால், பலர் இக்குடியிருப்புகளிலிருந்து வெளியேறிவிட்டனர். இதேபோல், கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி மந்தமான நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனாலும், பலர் வீடுகளை காலி செய்துவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதனால், ஏராளமான வீடுகள் பூட்டப்பட்டன. எனவே, பராமரிப்பு சரிவர இல்லை. இதனால், புதர் மண்டிக் கிடக்கிறது' என்றும் குடியிருப்புகளில் வசிப்போர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.
இதுபற்றி சிப்காட் திட்ட அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 37 ஆண்டுகளான குடியிருப்புக் கட்டடங்களை அகற்றிவிட்டு, புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுகின்றன என்ற பதிலைத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.