தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் போக்கு மாறுமா?

காரைக்கால், மார்ச் 18: வாடிக்கையாளர் கடன் தொகையை செலுத்தவில்லை என்பதைக் காரணம் காட்டி, அவரது புகைப்படத்தை விளம்பரப்படுத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் போக்கு மாற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை
Updated on
1 min read

காரைக்கால், மார்ச் 18: வாடிக்கையாளர் கடன் தொகையை செலுத்தவில்லை என்பதைக் காரணம் காட்டி, அவரது புகைப்படத்தை விளம்பரப்படுத்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் போக்கு மாற வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால் நகரப் பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என 30-க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இன்னும் சில வங்கிகள் தங்களது கிளைகளைத் தொடங்க இடம் தேர்வு செய்து வருகின்றன. ஒரு சிலவற்றைத் தவிர, மற்ற வங்கிக் கிளைகள் அனைத்தும் பெருவாரியாக வாடிக்கையாளர்களைச் சேர்க்க முடியாமல் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.

பல வங்கிக் கிளைகள் அரசுத் துறையினர், தொழில் துறையினர், விவசாயிகள் எனப் பல தரப்பினரையும் சந்தித்து, கடன் வழங்குவதாகக் கூறி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றன.

எல்லா வங்கிக் கிளைகளும் நகைக் கடன் வட்டி விகிதத்தை விளம்பரப்படுத்தி வருகின்றன.வங்கிகள் விவசாயிகள், தொழில் துறையினர், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் கடன்களைக் கொடுக்கின்றனர்.

வங்கிகளில் கடன் வாங்க முற்படுபவர்கள் அந்த நேரத்தில் பணம் கிடைத்தால் போதும் என்ற நிலையில், வங்கிகள் நீட்டிய காகிதத்தில் கையெழுத்து போட்டு விடுகின்றனர்.

கடன்களைப் பெறுபவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய கால அவகாசம் முடிவுறும் நிலையில், அவர்களது புகைப்படங்களை பத்திரிகையின் வாயிலாக விளம்பரப்படுத்தும் நிலையை மாற்ற வேண்டும்.

இதை விடுத்து, சுமுகமான முறையிலோ, நீதிமன்றங்கள் வாயிலாகவோ கடன்களை வசூலிக்க வங்கி நிர்வாகம் முற்படலாம்.

சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கடன் தொகையை வசூலிக்க கடன் பெற்ற வாடிக்கையாளர் பெயர், முகவரி, தந்தை

பெயர் ஆகியவற்றை புகைப்படத்துடன் வெளியிடப் போவதாக எச்சரித்து, வங்கி வாயிலில்

டிஜிட்டல் தட்டிகளை வைத்துள்ளன.

வங்கி நிர்வாகம் கடன் வாங்கியவர்களிடமிருந்து சுமுகமாகப் பேசி வசூலிக்க முடியும். அடுத்தகட்டமாக, ஈடாக வாங்கிவைத்துள்ள சொத்துகளை நீதிமன்றத்தின் அனுமதியோடு, ஜப்தி செய்ய முடியும். கடன் வாங்கியவரை கைது செய்யக் கூட நீதிமன்றம் உத்தரவிடலாம்.

இதுபோன்ற நடவடிக்கைகளை வங்கியாளர்கள் செய்கிறார்களோ, இல்லையோ? கடன் வாங்கியவரை நேரடியாக விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் வங்கிகள் இறங்குவது வேதனையை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதேபோல, ஒரு வாடிக்கையாளருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன என்பதை பிசிஎஸ்பிஐ என்கிற அமைப்பு தெரிவிக்கிறதாம்.

இவற்றைத் தெரிந்து கொண்டு, வாடிக்கையாளர் வங்கியை அணுகுவது சரியானதாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து வங்கி அதிகாரி கூறியது:

தனியார் வங்கிகள் இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பதில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்தான் கடன் வாங்கியவர்களின் புகைப்படங்களை பத்திரிகையின் வாயிலாக விளம்பரப்படுத்துகின்றன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com