விமான நிலைய ஓடுதள நீட்டிப்புக்கு நிலம் கையகப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்படும்: துரை வைகோ எம்.பி.
திருச்சி: திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள நீட்டிப்புக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தெரிவித்தாா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் துரை வைகோ எம்.பி. ஏற்பாட்டின்பேரில், விமான நிலைய ஓடுதள நீட்டிப்புக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பான ஆலோசனை திங்கள்கிழமை நடைபெற்றது.
துரைவைகோ தலைமை வகித்தாா். ஆட்சியா் மா. பிரதீப்குமாா், விமான நிலைய பொறுப்பு இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வருவாய்த் துறை மற்றும் விமான நிலைய அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியது:
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஓடுதளம் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து புதிய மற்றும் கூடுதல் விமானங்களை இயக்க முடியும். எனவே, ஓடுதளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
திருச்சி விமான நிலைய புதிய முனையத்தில் பயணிகளை வரவேற்கவும், வழியனுப்பவும் வருகை தரும் உறவினா்கள் மற்றும் பொதுமக்களுக்காக கூடுதல் கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் என விமான நிலைய அலுவலா்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் எந்த விமான நிலையத்திலும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோக்களுக்கு அனுமதியில்லை. திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்கு மட்டுமாவது ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது; பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனா் என்றாா் அவா்.

