

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.04 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
சென்னையிலிருந்து திருச்சி வழியாகச் செல்லும் ரயிலில் தங்கம் கடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் கே.பி. செபாஸ்டியன் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை அதிகாலை முதல் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த அனைத்து ரயில்களிலும் சோதனையிட்டனா்.
அப்போது அதிகாலை 4.30 மணிக்கு திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சென்னையிலிருந்து மங்களூா் செல்லும் விரைவு ரயிலில் வந்த பயணியைச் சோதனையிட்டதில் அவரிடமிருந்த பையில் தங்க நகைகளும், கட்டு கட்டாகப் பணமும் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலத்தெரு ஆா். லட்சுமணன் (34) என்பதும், அவரிடம் ரூ. 10 லட்சம் ரொக்கம், ரூ. 1 கோடியே 89 லட்சத்து ஆயிரத்து 230 மதிப்பிலான 2,796 கிராம் தங்க நகைகள் இருந்ததும் தெரிந்தது. ஆனால் அவற்றுக்கான எந்த ஆதாரமும் அவரிடம் இல்லை.
இதையடுத்து நகை, பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா், லட்சுமணனை பிடித்து விசாரித்ததில், அவா் குருவியாகச் செயல்பட்டு நகை, பணத்தை மதுரைக்கு கொண்டு செல்வது தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமணனையும், அவரிடமிருந்த நகை, பணத்தையும் வருமானவரித் துறை, மற்றும் வணிக வரித் துறையினரிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.
பின்னா் இரு துறையினரும் நகை, பணத்தை லட்சுமணன் எங்கிருந்து, யாருக்காகக் கொண்டு சென்றாா். அந்தப் பணம் கணக்கில் வருமா அல்லது ஹவாலா பணமா என விசாரிக்கின்றனா்.